கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்றம் செய்யும் தீர்மானம் அம்மாநில சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 


கேரள மாநிலத்தின் 9வது சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்றுமுன் தினம் தொடங்கியது. நேற்று நடந்த விவாதத்தில் மத்திய அரசு கொண்டு வரவுள்ள பொது சிவில் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக பேசிய அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பொது சிவில் சட்டத்தின் நடவடிக்கையில் இருந்து மத்திய அரசு பின்வாங்க வேண்டும் என வலியுறுத்தினார். 


அதை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில், மாநிலத்தின் பெயர் மாற்றுவது தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதாவது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என பெயர் மாற்ற வேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. சட்டமன்றத்தில் நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகள் 118-ன் கீழ் இந்த தீர்மானத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் கொண்டு வந்தார். அப்பொது பேசிய அவர், மலையாளத்தில் கேரளம் என அழைக்கப்படும் மாநிலத்தின் பெயர், பிற மொழிகளில் கேரளாவாக உள்ளது என்றும், இதை மாற்றி அனைத்து கோப்புகளிலும் கேரளம் என மத்திய அரசு மாற்ற வேண்டும் என்றார். 


1956ம் ஆண்டு நவம்பர் மாதம் மொழிவாரி மாநிலமாக கேரளா பிரிக்கப்பட்டது என்றும், அதே நாளில் தான், ‘கேரளப்பிறவி’ தினத்தை கொண்டாடி வருவதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து முதலமைச்சர் கொண்டு வந்த மாநிலத்தின் பெயர் மாற்றம் தீர்மானத்தை, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஏற்று கொண்டனர். இதை தொடர்ந்து தீர்மானத்தில் எந்தவித மாற்றங்களும் இன்றி  ஒருமனதாக ஏற்று கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 


சுதந்திரத்திற்கு பிறகு 1956ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, கேரளா உருவானது. பெரும்பாலான மலையாளிகள் வசித்ததால், கேரளாவின் ஆட்சி மொழியாக மலையாளம் உள்ளது.  மலையாள மொழியில் கேரளம் என அழைக்கப்படும் மாநிலம், ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் கேரளா என்றே அழைக்கப்படுகிறது. அரசியலைமைப்பு சட்டத்தின் முதல் அட்டவணையிலும் கேரளா என்றே உள்ளது. இதனால், மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்ற வேண்டும் என அம்மாநிலத்தின் சார்பில் நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்தனர்.