இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரான ஸ்மிருதி இரானியை நோக்கி 
வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினரான ராகுல் காந்தி, தகாத செய்கை செய்ததாக பாஜக கூட்டணி கட்சியை சேர்ந்த பெண் எம்பிக்கள் மக்களவை சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளனர்.


நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம்:


மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ், நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. அதன் மீதான விவாதம் நேற்று தொடங்கியது. விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய காங்கிரஸ் மக்களவை குழு துணை தலைவர் கவுரவ் கோகோய், பிரதமர் மோடி மீது சரமாரி குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.


இதை தொடர்ந்து, பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்களும், அதற்கு பாஜக அமைச்சர்களும் பதில் அளித்து பேசினர். இந்த சூழலில், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தின் இரண்டாவது நாளான இன்று பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, "ராவணனின் அகங்காரத்தால் இலங்கை பற்றி எரிந்ததாகவும் இந்தியாவில் அரசின் அகங்காரத்தால் ஹரியானா மற்றும் மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருப்பதாக" ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார்.


ஃப்ளையிங் கிஸ் கொடுத்தாரா ராகுல் காந்தி?


நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தின்போது, ஆளுங்கட்சி எம்பிக்களை நோக்கி ராகுல் காந்தி ஃப்ளையிங் கிஸ் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த ஸ்மிருதி இரானி, "ஆணாதிக்கவாதியால் மட்டுமே பெண் எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கி ஃப்ளையிங் கிஸ் கொடுக்க முடியும். கண்ணியமற்ற செயலை ராகுல் காந்தி செய்துள்ளார்" என்றார்.


இது தொடர்பாக, பாஜக கூட்டணி கட்சியை சேர்ந்த பெண் எம்பிக்கள் மக்களவை சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், "ராகுல் காந்தி, ஸ்மிருதி இரானியை நோக்கி தகாத செய்கை செய்துள்ளார். அநாகரீகமான முறையில் நடந்து கொண்டுள்ளார். அவையில் உள்ள பெண் உறுப்பினர்களின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார். 


எனவே, அவருக்கு எதிராக கடும் நடவடக்கை எடுக்க வேண்டும். இது அவைக்கு அவப்பெயர் விளைவித்ததுடன் அதன் கண்ணியத்தை குறைக்கும் வகையில் உள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது. 


பின்னர், செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய ஸ்மிருதி இரானி, "நாடாளுமன்றத்தில் இந்த அளவுக்கு வெளிப்படையாக ஆணாதிக்க செயலை கண்டதில்லை. பெண்களின் கண்ணியத்தை காப்பதற்காக சட்டம் இயற்றப்படும் அவையில் ஒரு நபரின் ஆணாதிக்க செயலை அவை உறுப்பினர்கள் கண்டுள்ளனர். அவரை திருத்த வேண்டாமா?" என தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி,  ஸ்மிருதி இரானி ஆகியோருக்கிடையே கடும் விவாதம் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் அமேதியில் ராகுல் காந்தியை தோற்கடித்து வெற்றிபெற்றவர் ஸ்மிருதி இரானி என்பது குறிப்பிடத்தக்கது.