ராவணனின் அகங்காரத்தால் இலங்கை பற்றி எரிந்தது. இங்கோ அரசின் அகங்காரத்தால் ஹரியானா மற்றும் மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது என மக்களவையில் ஆவேசமாக ராகுல்காந்தி பேசினார். 


எம்பி பதவி நீக்கம் ரத்துக்கு பிறகு முதல் முறையாக மக்களவையில் எம்பி ராகுல்காந்தி பேசினார். ராகுல்காந்தி பேச தொடங்கியதும் பாஜக உறுப்பினர்கள் கூச்சலிட தொடங்கினர். எனினும், பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ராகுல்காந்தி பேச தொடங்கினார். ”சில நாட்களுக்கு வன்முறை நடந்த மணிப்பூருக்கு முன்பு நான் சென்றிருந்தேன். ஆனால் பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை.


மணிப்பூர் இந்தியாவில் இல்லை என அவர் நினைத்து கொண்டிருக்கிறார். வன்முறையால் மணிப்பூரை இரண்டாக பிளந்துள்ளனர். மணிப்பூரில் இந்திய படுகொலை நிகழ்ந்துள்ளது. தேச துரோகிகள் பாரத மாதாவை படுகொலை செய்துள்ளனர். என்னுடைய ஒரு தாய் இங்கே அமர்ந்திருக்கிறார். மற்றொரு தாயை மணிப்பூரில் கொன்றிருக்கிறீர்கள்.


மணிப்பூரில் ராணுவத்தை பயன்படுத்தி இருந்தால் ஒரே நாளில் அமைதியை கொண்டு வரலாம். ஆனால், அதை அரசு செய்திட முடியவில்லையா? அன்று ராவணனின் அகங்காரத்தால் இலங்கை பற்றி எரிந்தது. இன்று அரசின் அகங்காரத்தால் ஹரியானா மற்றும் மணிப்பூர் மாநிலங்கள் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. ராவணன் கூட மக்களின் பேச்சை கேட்டார். ஆனால் ஜனநாயக ஆட்சி செய்து வருவதாக சொல்லும் இந்த அரசு மக்களின் பேச்சை கேட்கவில்லை” என்று ஆவேசமாக ராகுல்காந்தி பேசினார். 






மேலும் படிக்க: Rahul Gandhi Rescue : சாலையில் திடீர் விபத்து.. பதறி ஓடிய ராகுல் காந்தி!