மணமகளாய் உனைப் பார்த்த பின்னும்.. நெஞ்சம் சிறைபிடிக்க துடிக்குதடி என்று பாடுவது தமிழ் சினிமாவில் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கலாம். ஆனால், நிஜ வாழ்வில் திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது என மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை தீர்ப்பளித்துள்ளது.


வழக்கின் முன்கதை சுருக்கம்:


மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரில் மளிகைக் கடை வைத்திருப்பவர் ஸ்ரீகிருஷ்ண திவாரி. இவர் தனது கடைக்கு அருகே வசிக்கும் 45 வயது நிரம்பிய திருமணமான பெண்ணின் மீது நாட்டம் கொண்டுள்ளார். அந்தப் பெண்ணுக்கு ஒரு நாள் காதல் கடிதமும் கொடுத்துள்ளார்.  அந்தப் பெண் அதிர்ந்து போய் அவரைப் புறக்கணிக்க முயன்றுள்ளார். இருந்தாலும் ஸ்ரீகிருஷ்ண திவாரி தனது லீலைகளைக் கைவிடுவதாக இல்லை. பெண்ணைப் பார்க்கும் போதெல்லாம் பாலுணர்வுடன் கூடிய சமிக்ஞைகளைக் காட்டியுள்ளார். போதாதற்கு அந்தப் பெண்ணை மிரட்டியும் உள்ளார். கடிதம் விஷயத்தையோ இல்லை தனது லீலைகளைப் பற்றியோ வெளியில் கூறினால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார்.


ஆனால், ஒருகட்டத்தில் கிருஷ்ணதிவாரியின் கொடுமைகள் தாளாமல் அப்பெண் காவல்துறையில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில் கிருஷ்ண திவாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். செசன்ஸ் நீதிமன்றம் அவருக்கு ரூ.40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனையடுத்து கிருஷ்ண திவாரி மும்பை உயர் நீதிமன்றம் நாக்பூர் கிளையில் மேல்முறையீடு செய்தார்.


மேல்முறையீட்டு மனுவில், அந்தப் பெண் எனது கடையில் மளிகைப் பொருட்களை கடனாக வாங்குவார். கடன்பாக்கியை வசூலிக்க முயன்றபோது என் மீது போலி புகாரைக் கொடுத்துள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கிருஷ்ணதிவாரி மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இருக்கின்றன. அதனால், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை சரியானதே. மேலும், அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.90 ஆயிரமாக உயர்த்தி நீதிமன்றம் உத்தரவிடுகிறது. ஏற்கெனவே மனுதாரர் 45 நாட்கள் சிறையில் இருந்துவிட்டதால் ரூ.5000 குறைத்துக் கொள்ளப்படுகிறது என்று உத்தரவிடப்பட்டது. கிருஷ்ண திவாரி திருந்த வாய்ப்பளித்து கூடுதல் சிறைத் தண்டனை இல்லாமல் அபராதத்துடன் விடுவிக்கப்படுகிறார் என்று கூறப்பட்டது.


கடிதம் குற்றமே..


திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுப்பது அவரது கண்ணியத்தைக் குறைக்கும் செயல். மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் கடிதத்தைக் கொடுத்துவிட்டு பெண்ணை மிரட்டியுள்ளார், ஆபாச தொனியில் சமிக்ஞைகளும் காட்டியுள்ளார். இவை எல்லாமே குற்றச்செயல் என மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை தெரிவித்துள்ளது.