தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கொல்லம் சட்டப்பேரவை உறுப்பினரும் நடிகருமான முகேஷ்-க்கு எதிராக ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில், இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் கைது செய்யப்பட்டார். ஆனால், உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தனது வழக்கறிஞருடன் வந்த முகேஷ், எர்ணாகுளத்தில் உள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) முன்பு ஆஜரானார். அங்கு அவரிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவரை கைது செய்த போலீஸ் அவரது சொந்த வாகனத்தில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர்.
பாலியல் வழக்கில் சிக்கிய நடிகர் முகேஷ்:
முன்னதாக, கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி, எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் அவருக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கியது. காவல்துறை அதிகாரிகள் அழைக்கும் நாளில் காலை 9 மணிக்கு விசாரணை அதிகாரியிடம் ஆஜராக வேண்டும். விசாரணையை முடியும் வரை காத்திருந்து, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.
பெண் நடிகையை பாலியல் வன்கொடுமை செய்ததாக முகேஷ் மீது மருது போலீஸார் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி, வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, அவர் மீது ஆகஸ்ட் 26ஆம் தேதி நடிகர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இதற்கு முன்பே, முகேஷ் மீது பெண் இயக்குனர் டெஸ் ஜோசப் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார்.
ஹேமா கமிட்டி அறிக்கை:
இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளுக்கு முகேஷ் மறுப்பு தெரிவித்திருந்தார். அவை தன்னை "பிளாக்மெயில்" செய்வதற்கான முயற்சிகள் என கூறியிருந்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குற்றச்சாட்டுகளை உருவாக்கி தனது வாழ்க்கையை சீரழிக்க முயல்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
மலையாள சினிமாத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னை குறித்து விவரிக்கும் ஒய்வுபெற்ற நீதிபதி கே. ஹேமா தலைமையிலான ஆணையம் அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு முன்பே, கேரள அரசிடம் இது சமர்பிக்கப்பட்டாலும், சமீபத்தில்தான் வெளியிடப்பட்டது.
சினிமாத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து அந்த அறிக்கையில் விரிவாக பேசப்பட்டது. பட வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக உடன்பட தாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாக பல பெண்கள் அதில் வாக்குமூலம் அளித்திருந்தனர்.