கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் கட்டுக்குள் வராமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் நிபா வைரஸ்(Nipah Virus) தொற்று அச்சம் ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா வைரசால் அவதிப்பட்டு வரும் கேரளாவில் தற்போது நிபா வைரசால் 12 வயது சிறுவன் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நிபா வைரஸ் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசின் குழு ஒன்று கேரளா விரைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


நிபா வைரஸ் ஒரு வகை தொற்றுக்கிருமி. பேரமிக்ஸிவிரிடே எனும் குடும்பத்தின் கீழ் இந்த நிபா வைரஸ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. நிபா வைரஸ் முதன்முதலாக 1998-ஆம் ஆண்டு மலேசியாவில் உள்ள ஒரு பகுதியில் கண்டறியப்பட்டது. அந்த இடத்தின் பெயர் காரணமாகவே, இந்த வைரசுக்கு நிபா வைரஸ் என்று பெயரிடப்பட்டது. முதன்முதலாக இந்த கிருமி பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடம் பரவியது. அப்போது, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இந்த வைரசால் பலரும் பாதிக்கப்பட்டனர்.




பன்றிகளினால் மட்டுமின்றி வௌவால்களாலும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. வௌவால்கள் சாப்பிட்ட பழங்களின் மூலமாகவும் இந்த நிபா வைரஸ் பாதிப்பு அதிகளவில் பரவ வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் கடந்த 2001-ஆம் ஆண்டு மற்றும் 2007-ஆம் ஆண்டு நிபா வைரசின் தாக்கம் காணப்பட்டது.


அறிகுறிகள் | Nipah Virus Symptoms:


நிபா வைரஸ் என்பது காற்றின் மூலம் பரவக்கூடியது அல்ல. இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் தலைவலி, காய்ச்சல், குமட்டல், தலைசுற்றல், சோர்வு, மனக்குழப்பம் போன்றவை ஏற்படும். இந்த வைரசின் ஆரம்ப நிலையில் மூச்சுத்திணறல் ஏற்படும். நிபா வைரசின் அறிகுறிகள் 7 முதல் 10 நாட்கள் வரை நீடிக்கும்.


தடுப்பு, சிகிச்சை | Nipah Virus Treatment:


நிபா வைரஸ் பாதிப்பிற்கு என்று இதுவரை பிரத்யேகமாக எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை மட்டுமின்றி மனத் தேற்றலின் மூலமாகவே அவர்களை குணப்படுத்த முடியும். மேலும், நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முகமூடி, கையுறை போன்ற முன்னெச்சரிக்கை உபகரணங்களை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், மருத்துவமனையில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் நிபா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடைகள், படுக்கைகள், போர்வைகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும்.  




அறிவுரைகள்:


நிபா வைரஸ் என்பது ஒருவரிடம் இருந்து ஒருவரிடம் தொடுதல் மூலமாக எளிதில் பரவக்கூடிய அபாயங்கள் இருப்பதால், நிபா வைரசால் உயிரிழந்தவர்களின் முகங்களை கட்டாயம் மறைக்க வேண்டும் என்று சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், நிபா வைரசினால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு முன்பு குளிப்பாட்டம் போதும் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்த வைரஸ் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசிகளும், பிரத்யேக மருந்தும் இதுவரை கண்டுபிடிக்காமல் இருப்பதால் வைரசால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியம். நோயாளியிடம் இருந்து இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை நன்றாக சோப்புகளால் அடிக்கடி சுத்தம் செய்வது மிகவும் அவசியம். இந்த வைரசை மூக்கு மற்றும் தொண்டையில் உள்ள சளி மாதிரிகளில் இருந்தும், ரத்தம் மற்றும் சிறுநீரில் இருந்தும் மேற்கொள்ளப்படும் சோதனைகள் மூலம் உறுதி செய்யப்படும்.