காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்கச் சென்றவர்களை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி  வழி அனுப்பி வைத்தார். சிறப்பு ரயிலில் சென்றவர்களை ஆளுநர் ரவி, மத்திய இணை அமைச்சர் முருகன் ஆகியோர் கொடி அசைத்து அனுப்பி வைத்தனர்.


காசி தமிழ் சங்கமம்


சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் கொண்டாடும் வகையிலும், தமிழ்நாடு - காசி இடையேயான தொன்மையான நாகரிகத் தொடர்பை புதுப்பிக்கும் வகையில் மத்திய அரசு ’காசி தமிழ் சங்கமம் - 2022’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.


உத்தரப் பிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி இணைந்து இந்த காசி தமிழ் சங்கமம் நடத்தும் நிலையில், வரும் டிசம்பர் 19ஆம் தேதி வரை காசியில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.




இன்று இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து முதல் குழு ரயிலில் காசிக்கு புறப்பட்டது. ராமேஸ்வரத்தில் புறப்பட்ட ரயிலுக்கு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கொடியசைத்து தொடங்கி வைத்த ஆளுநர் 

 

தொடர்ந்து இன்று மதியம் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வருகை தந்த குழுவினருடன் கலந்துரையாடி, அவர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி வழி அனுப்பி வைத்தார்.  தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் பேசியதாவது:

 

”காசியில் இன்றும் தமிழ் மக்கள் பலர் உள்ளனர். தமிழ் கோயில்கள் உள்ளன. காசியில் படகு ஓட்டும் நபர்கள் நன்றாக தமிழ் பேசுகிறார்கள். நான் பேசுவதை விட சிறப்பாக அவர்கள் தமிழ் பேசுகிறார்கள். 







நாம் பல காலமாக மறந்திருந்ததை மீண்டும் அறிமுகப்படுத்தும் பிரதமர் மோடியின் முயற்சி இது. ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதற்கு  இது உதாரணம். 


பாரதத்துக்கான பயணம்


அரசியலமைப்பு சட்டத்தின் முதல் சட்டப்பிரிவு இந்தியாவை பாரதம் என்று கூறுகிறது. இந்தியாவிலிருந்து பாரதத்துக்கு செல்வதற்கான பயணம் எது. இந்தியாவை புரிந்து கொண்டவர்கள் பாரதத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.


தமிழ்நாட்டில் இருந்து மக்கள் காசிக்கு செல்ல வேண்டும். காசியில் இருக்கும் மக்கள் தமிழ்நாட்டுக்கு வர வேண்டும்"  எனப் பேசியுள்ளார்.


தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற கலை, யோகா, ஆயுர்வேதம் சார்ந்த கலாச்சார வல்லுநர்கள், தொழில் முனைவோர், தங்கும் விடுதி உரிமையாளர்கள், கைவினைஞர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், வலைப்பதிவர்கள் எனப் பலர் சென்று இந்த சங்கமத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.


இலக்கியம், பழங்கால நூல்கள், தத்துவம், ஆன்மீகம், இசை நடனம், நாடகம், யோகா, ஆயுர்வேதம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், நவீன கண்டுபிடிப்புகள் வர்த்தகம் போன்ற பல்வேறு அம்சங்களை பற்றிய கருத்தரங்குகள், விவாதங்கள், விரிவுரைகள் போன்றவை இந்த நிகழ்ச்சியில் நடைபெற உள்ளது.


முன்னதாக நவம்பர் 12ஆம் தேதி தமிழ்நாட்டு வருகை தந்த பிரதமர் மோடி,  காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க தனது தொகுதியான வாரணாசிக்கு வருகை தரும் முதல் குழுவை வரவேற்க தான் அங்கே இருப்பேன் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.