டெல்லியில் அரங்கேறிய கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண்ணை அவரது காதலனே கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி அப்புறப்படுத்திய சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


அப்தாப் அமீன் பூனவல்லா என்பவருக்கும் அவரது லிவ்-இன் காதலி ஷ்ரத்தாவுக்கும் கடந்த மே 18ஆம் தேதி சண்டை ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு, ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்து அவர் கொலை செய்துள்ளார். பின்னர், அவர் தனது உடலை 35 துண்டுகளாக வெட்டி அவற்றை வைக்க குளிர்சாதன பெட்டியை வாங்கி உள்ளார். 


வேறு யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு உடல் பாகத்தையும் ஒவ்வொரு நாள் இரவு எடுத்து சென்று டெல்லியைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் எறிந்துள்ளார். இதற்காக, தினமும் அதிகாலை 2 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி உடல் பாகங்களை அப்புறப்படுத்தி உள்ளார். 






இறுதியாக, காவல்துறை அவரை கைது செய்து, விசாரணைக்கு உட்படுத்திய பிறகு பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு மத்தியில், தவறான தகவல்களை அளித்து காவல்துறை விசாரணையை திசை திருப்புவதாக காவல்துறை தரப்பு அவர் மீது சந்தேகிக்கிறது. எனவே, அவருக்கு உண்மையை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது. இதற்கு, தெற்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 


உண்மையை கண்டறியும் நார்கோ சோதனை என்றால் என்ன?


நார்கோ அல்லது நார்கோ அனாலிசிஸ் சோதனையில், குற்றம் சாட்டப்பட்டவரின் உடலில் சோடியம் பெண்டால் என்ற மருந்து செலுத்தப்படும். இது அவர்களை ஒரு ஹிப்னாடிக் அல்லது மயக்க நிலைக்கு கொண்டு செல்லும். அதில், அவர்களின் கற்பனை திறன் நடுநிலையாக இருக்கும். 


இந்த ஹிப்னாடிக் நிலையில், குற்றம் சாட்டப்பட்டவரால் பொய் சொல்ல முடியாது. அவரால் உண்மையை மட்டுமே சொல்ல முடியும். சோடியம் பெண்டால் அல்லது சோடியம் தியோபென்டல் என்பது வேகமாகச் செயல்படும் குறுகிய கால மயக்க மருந்து ஆகும். அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு இதுவே அதிக அளவில் வழங்கப்படும்.


இது மத்திய நரம்பு மண்டலத்தில் மனத் தளர்ச்சியை ஏற்படுத்தும் பார்பிட்யூரேட் வகை மருந்து வகைகளில் ஒன்று. இந்த மருந்து, பொய் சொல்வதற்கான உடல் அமைப்பின் உறுதியை பலவீனப்படுத்தும். இந்த மருந்து, சில நேரங்களில் "உண்மை சீரம்" என்று குறிப்பிடப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது புலனாய்வு அமைப்புகளால் இது பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.