மேற்கு வங்க ஆளுநராக டாக்டர் சி.வி ஆனந்த போஸை நியமித்து குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். 


இதுகுறித்து குடியரசுத் தலைவரின் செய்தித் தொடர்பாளர் அஜய் குமார் சிங் வெளியிட்ட அறிக்கையில்,”
"மேற்கு வங்காளத்தின் ஆளுநராக டாக்டர் சி.வி. ஆனந்த போஸை நியமிப்பதில் இந்தியக் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சியடைகிறார். அவர் பதவியேற்ற நாள் முதல் இந்த நியமனம் அமலுக்கு வரும்" என்று தெரிவித்துள்ளார்.


முன்னாள் அரசு அதிகாரியான டாக்டர் சி.வி. ஆனந்த போஸ், பல்கலைக்கழக துணைவேந்தராகவும், முதலமைச்சரின் முதன்மை செயலாளராகவும், மத்திய பொதுத்துறை நிறுவனமான மத்திய சேமிப்புக் கழகத்தின் (CWC) தலைவராகவும், மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார். அவர் UN- உடன் ஆலோசனை அந்தஸ்தில், வாழ்விடக் கூட்டணியின் தலைவராக இருந்துள்ளார். 


மேலும், கேரள முதல்வரின் செயலாளராகவும், கல்வி, வனம் மற்றும் சுற்றுச்சூழல், தொழிலாளர், பொது நிர்வாகம் மற்றும் வருவாய் வாரியம் போன்ற பல்வேறு அமைச்சகங்களில் முதன்மை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். சிறந்த எழுத்தாளரும், கட்டுரையாளருமான டாக்டர். சி.வி. ஆனந்த போஸ் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் உட்பட ஆங்கிலம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 40 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். 


 


2011 ஆம் ஆண்டு IAS இலிருந்து ஓய்வு பெற்றதில் இருந்து, டாக்டர் போஸ் தனது எழுத்துக்கள், விரிவுரைகள் மற்றும் ஊடக நேர்காணல்களில் இந்தியாவின் பாரம்பரியம், தேசியவாதம் ஆகியவற்றை நிலைநிறுத்துவதில் தனது நேரத்தையும் முயற்சியையும் அர்ப்பணித்து வருகிறார்.