கடந்த 2019ஆம் ஆண்டு, பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. சிறப்பு அந்தஸ்தின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பு வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, பாதுகாப்பு, தகவல் தொடர்பு, வெளி விவகாரங்களை தவிர மற்ற எல்லா துறைகளிலும் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஜம்மு காஷ்மீர் அரசுக்கு வழங்கப்பட்டது.


சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. சட்டப்பேரவையற்ற யூனியன் பிரதேசமாக லடாக் இருந்து வருகிறது. அது மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. 


ஜம்மு காஷ்மீருக்கு சட்டப்பேரவை இருந்தபோதிலும், அதற்கு இன்னும் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீரில் பயங்கரவாதம் குறைந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், பயங்கரவாத தாக்குதல்கள் நின்றபாடில்லை என்றும் முன்பைவிட தற்போது அதிக எண்ணிக்கையில் நிகழ்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.


முன்னாள் காவல்துறை அதிகாரி சுட்டுக்கொலை:


இந்த நிலையில், பாரமுல்லா மாவட்டம் மசூதி ஒன்றன் உள்ளே ஓய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரியை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட அதிகாரியான முகமது ஷஃபி மிர், ஜம்மு காஷ்மீரில் மூத்த காவல் கண்காணிப்பாளராக (எஸ்.எஸ்.பி) பணியாற்றியவர்.


கடந்த 2012ஆம் ஆண்டு, பணியில் இருந்து ஓய்வு பெற்ற முஹம்மது ஷஃபி மிர், சமூக சேவை செய்து வந்தார். அதுமட்டும் இன்றி, உள்ளூர் மசூதியில் தொண்டாற்றி வந்துள்ளார். இன்று காலை ஒலிபெருக்கியின் மூலம் தொழுகைக்காக அழைப்பு விடுக்க செல்லும்போது சுடப்பட்டுள்ளார்.


இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் காவல்துறை வெளியிட்ட தகவலில், "வடக்கு காஷ்மீர் எல்லைப் பகுதியில் உள்ள பாரமுல்லா மற்றும் உரி நகரங்களுக்கு இடையே உள்ள ஷீரியின் கந்த்முல்லா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது. பாரமுல்லாவில் மசூதி ஒன்றில் தொழுகையின் போது ஓய்வுபெற்ற அதிகாரி முகமது ஷஃபி மீது பயங்கரவாதிகள்  துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில், படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்துவிட்டார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


பயங்கரவாதிகள் வெறிச்செயல்:


உயிரிழந்த முகமது ஷஃபியின் சகோதரர் அப்துல் கரீம் பேசுகையில், "மற்ற நாட்களைப் போலவே, ஷஃபி அக்கம் பக்கத்திலுள்ள மசூதியிலிருந்து தொழுகை அழைப்பை வெளியிட விடியற்காலையில் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் தொழுகைக்கு அழைப்பு விடுத்தபோது, துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டோம். யாரும் அதை கவனிக்கவில்லை.


சுமார் 10-15 நிமிடங்களுக்குப் பிறகு, என் மருமகள் அக்கம்பக்கத்தில் அழும் சத்தம் கேட்டது. அவர் மசூதியை அடைந்த நேரத்தில், அவரது சகோதரர் உள்ளூர் மக்களால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நான் மசூதியில் ரத்த கரையை பார்த்தேன். அவர் கீழே விழுந்து மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால், தரையில் ரத்த கரை படிந்ததாக நினைத்தேன். ஆனால், நான் மருத்துவமனைக்கு சென்றபோது, ​​அவர் சுடப்பட்டதை அறிந்தேன்" என்றார்.