சமீப காலமாகவே, குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீட்டை புல்டோசரை பயன்படுத்தி உத்தர பிரதேச மாநில அரசு இடிப்பது தொடர் கதையாகி வருகிறது.
குறிப்பாக, இஸ்லாமியர்களின் வீடி இடிக்கப்படும் சம்பவம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. இந்த புல்டோசர் அரசியலை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கடுமையாக சாடி இருந்தது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதியின் வீட்டை புல்டோசரை கொண்டு அரசு நிர்வாகம் இடித்துள்ளது. சட்ட விரோதமாக கட்டப்பட்ட பயங்கரவாதியின் வீடி இடிக்கப்பட்டதாக அரசு அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அரசு அதிகாரி கூறுகையில், "புல்வாமா மாவட்டத்தில் உள்ள ராஜ்போராவில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி ஆஷிக்கின் வீடு கட்டப்பட்டது. நியூ காலனி பகுதியில் உள்ள இரண்டு மாடி வீட்டை இடிக்க புல்டோசர்கள் பயன்படுத்தப்பட்டன. கட்டிடத்தை இடிக்க சென்ற அதிகாரிகளுடன் காவல்துறை அதிகாரிகளும் சென்றிருந்தனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு ஆஷிக் குடிபெயர்ந்தார். பல பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னால் அவர் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு, சமையல்காரரான ஆஷிக்கின் சகோதரர் மன்சூர் அகமது கொல்லப்பட்டார்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், "பயங்கரவாத குழுக்களிடையே ஏற்பட்ட போட்டியின் காரணமாக மன்சூர் கொல்லப்பட்டார். ஷோபியானில் உள்ள ஒரு பழத்தோட்டத்தில் குண்டடிப்பட்ட அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது" என்றார்.
சமீபத்தில், முகமது நபிகள் குறித்து பாஜக நிர்வாகிகள் சர்ச்சை கருத்து தெரிவித்திருத்தனர். அதற்கு எதிராக இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். எதிர்ப்பு தெரிவித்தவர்களின் வீட்டை உத்தர பிரதேச அரசு புல்டோசரை பயன்படுத்தி இடித்ததாக புகார் எழுந்தது.
இந்த விவகாரத்தில், உத்தர பிரதேச அரசை கடுமேயாக சாடிய உச்ச நீதிமன்றம், "கட்டிடங்களை சட்டத்தின்படியே இடிக்க வேண்டும். அவை பழிவாங்கும் வகையில் இருக்க முடியாது. எல்லாம் நியாயமாக இருக்க வேண்டும். அதிகாரிகள் சட்டப்படி மட்டுமே செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அசம்பாவிதம் எதுவும் நடக்காதவாறு பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்" என தெரிவித்தது.
கட்டிடங்கள் சட்ட விரோதமாக இடிக்கப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், "கட்டிடங்களை இடிப்பதற்கு தடை விதிக்க முடியாது. சட்டப்படி செல்லுங்கள் என்று சொல்லலாம்" என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
சமீபத்தில், பெண் ஒருவரை தகாத வார்த்தைகளை சொல்லி தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக நிர்வாகியின் சட்ட விரோத கட்டிடங்கள் புல்டோசரால் இடிக்கப்பட்டது.