எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் பா.ஜ.க. தங்களின் அரசுகளை அமைக்க முயற்சி செய்து வருவதாக தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார்போல, மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டது.


பா.ஜ.க.வின் துணையோடு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தன்னுடைய சொந்த கட்சியையே இரண்டாக உடைத்து முதலமைச்சரானார். இதற்காக, சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு 100 கோடி ரூபாய் அளவுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 


இதையடுத்து, தெலங்கானாவில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சி மாற 100 கோடி ரூபாய் அளவுக்கு பணம் அளிக்கப்பட்டதாக அம்மாநில காவல்துறை வெளியிட்ட பகீர் தகவல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


இதற்கு மத்தியில், டெல்லியில் 15 ஆண்டுகால பா.ஜ.க. ஆதிக்கத்தை உடைத்து உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிக் கொடியை ஏற்றியிருந்தது ஆளும் ஆம் ஆத்மி கட்சி. டெல்லயில் உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜகவின் கைகளே கடந்த 15 ஆண்டுகளாக ஓங்கியிருந்தது. அதை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி, 134 இடங்களில் வெற்றி பெற்று டெல்லி உள்ளாட்சியையும் கைப்பற்றியது.


இந்நிலையில், தங்களின் கவுன்சிலர்களை வாங்க பாஜக முயற்சிப்பதாக ஆம் ஆத்மி பரபரப்பு குற்றம்சாட்டை சுமத்தியுள்ளது.


ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் டாக்டர். ரோனாக்ஷி ஷர்மா, அருண் நவாரியா, ஜோதி ராணி ஆகியோருடன் இணைந்து ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது பேசிய சஞ்சய் சிங், "டெல்லியில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 30 இடங்கள் குறைவாகப் பெற்றாலும், கடந்த தேர்தலை விட 80 இடங்களை இழந்துள்ளது.


மஹாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம், உத்தராகண்ட், மத்திய பிரதேசம், கர்நாடகா, கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் பேசியது போல பாஜக கேவலமாக தரம் தாழ்ந்துள்ளது. டெல்லியில் தேர்வு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகளை விலைக்கு வாங்கும் அதே சூத்திரத்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.


மிரட்டல் மற்றும் பணத்தின் மூலம் ஜனநாயகத்தை கொலை செய்து மக்களின் விருப்பத்தை அவமதிக்க முயற்சிப்பவர்களை கைது செய்து சிறையில் அடைக்க டெல்லி போலீஸ் கமிஷனரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.


எங்களை விட 30 இடங்கள் குறைவாக பெற்றாலும், மேயர் தங்களுடையதாக இருக்க வேண்டும் என சொல்லும் அளவுக்கு வெட்கமற்ற கட்சி பாஜக.


யோகேந்திர சந்தோலியா என்ற நபர் ஷர்மாவை அழைத்து, பாஜகவின் மாநிலத் தலைவர் ஆதேஷ் குமார் குப்தாவுடன் பேச விரும்புவதாகக் கூறினார். வெறும் 10 கவுன்சிலர்களை வாங்குவதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


பாரதிய கோக்கா கட்சி (குதிரை பேரம் செய்ததாகக் கூறப்படும் பாஜகவை கிண்டல் செய்வதற்காக ஆம் ஆத்மி வைத்த பெயர்) ஒவ்வொரு கவுன்சிலருக்கும்  10 கோடி ரூபாய் பட்ஜெட் உள்ளது" என்றார்.