காசி தமிழ் சங்கமம் 2022: தமிழ்நாட்டிலிருந்து புறப்பட்ட முதல் குழு... வாரணாசியில் நவ.19 நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

சமீப காலமாக தமிழ் மொழி குறித்த பரப்புரையில் பாஜகவினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில்,  இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்வு பாஜகவின் அரசியல் பிரச்சாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Continues below advertisement

உத்தரப் பிரதேசம் வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் 2022 நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து முதல் குழு ரயிலில் காசிக்கு புறப்பட்டது.

Continues below advertisement

நவ.19 வாரணாசியில் தொடங்கி வைக்கும் பிரதமர்

ராமேஸ்வரத்தில் புறப்பட்ட ரயிலுக்கு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் கொண்டாடும் வகையிலும், தமிழ்நாடு - காசி இடையேயான தொன்மையான நாகரிகத் தொடர்பை புதுப்பிக்கும் வகையில் மத்திய அரசு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி இணைந்து இந்த காசி தமிழ் சங்கமம் நடத்தும் நிலையில், வரும் டிசம்பர் 19ஆம் தேதி வரை காசியில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

பிரதமர் உறுதி

முன்னதாக நவம்பர் 12ஆம் தேதி தமிழ்நாட்டு வருகை தந்த பிரதமர் மோடி,  காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க தனது தொகுதியான வாரணாசிக்கு வருகை தரும் முதல் குழுவை வரவேற்க தான் அங்கே இருப்பேன் எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் பிரதமராகவும், வாரணாசி எம்பியாகவும் அங்கிருந்து அவர்களை வரவேற்று தமிழ்நாடு கலாச்சாரத்தை பறைசாற்றக்கூடிய அனைத்து விஷயங்களையும் தான் கண்டுகளிக்கப்போவதாகவும், காசி மக்களுக்கு இது குறித்து எடுத்துச் சொல்லப் போவதில் தான் பெருமையடைவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

அதேபோல், தமிழ்நாட்டுக்கு முன்னதாக வருகை தந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, உலகத்தின் தொன்மையான, பழமையான மொழி நம் தாய் மொழி தமிழ் தான். தமிழின் தொன்மையை பறைசாற்றுவது தமிழர்களின் கடமை அல்ல, இந்தியர்களின் கடமை” எனத் தெரிவித்திருந்தார்.

சமீப காலமாக தமிழ் மொழி குறித்த பரப்புரையில் பாஜகவினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில்,  இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்வு பாஜகவின் அரசியல் பிரச்சாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இலக்கியம், பழங்கால நூல்கள், தத்துவம், ஆன்மீகம், இசை நடனம், நாடகம், யோகா, ஆயுர்வேதம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், நவீன கண்டுபிடிப்புகள் வர்த்தகம் போன்ற பல்வேறு அம்சங்களை பற்றிய கருத்தரங்குகள், விவாதங்கள், விரிவுரைகள் போன்றவை இந்த நிகழ்ச்சியில் நடைபெற உள்ளது.

வழி அனுப்பி வைக்கும் ஆளுநர்

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற கலை, யோகா, ஆயுர்வேதம் சார்ந்த கலாச்சார வல்லுநர்கள், தொழில் முனைவோர், தங்கும் விடுதி உரிமையாளர்கள், கைவினைஞர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், வலைப்பதிவர்கள் இந்த சங்கமத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காசிக்கு செல்லும் முதல் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களுடன் கலந்துரையாடி, அவர்களை வழி அனுப்பி வைக்கிறார். இந்நிகழ்வில் மத்திய அமைச்சர் எல்.முருகனும் கலந்து கொள்கிறார். வரும் 19ஆம் தேதி பிரதமர் மோடி காசியில் இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார்.

இயக்கப்படும் ரயில்கள்

இதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து கலைஞர்கள் காசிக்கு செல்ல இருக்கிறார்கள். இவர்கள் வசதிக்காக நவம்பர் 16, 23, 30 டிசம்பர் 7 மற்றும் 14 ஆகிய நாட்களில் ராமேஸ்வரம் - பனாரஸ் விரைவு ரயிலில் (22535) 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்படட இருக்கிறது.

மறு மார்க்கத்தில் நவம்பர் 27 டிசம்பர் 4, 11 மற்றும் 18 ஆகிய நாட்களில் பனாரஸ் - ராமேஸ்வரம் விரைவு ரயிலில் (22536) 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட இருக்கின்றன.

இதே போல சென்னை, கோயம்புத்தூர் கலைஞர்களின் வசதிக்காக எர்ணாகுளம் - பாட்னா விரைவு ரயில், டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - கயா விரைவு ரயில், பாடலிபுத்திரம் - பெங்களூர் விரைவு ரயில் ஆகியவற்றில் முறையே 3 குளிர்சாதன மூன்றெழுத்து படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட இருக்கிறது.

Continues below advertisement