கரூர் மாவட்டத்தில் திறன் மேம்பாட்டு பிரிவின் கீழ் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பாலம் திட்டத்திற்காக கரூர் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தி இந்தியன் எக்ஸ்பிரஸ் எக்ஸலன்ஸ் இன் கவர்னன்ஸ் “விருது” புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் படித்த வேலை தேடும் இளைஞர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இடையே பாலமாக இருந்து அனைவருக்குமான வேலைவாய்புகளை உருவாக்குவதன் மூலம் இளைஞர்களுக்கு படிப்புக்கு ஏற்ற வேலைவாய்ப்பும், தொழில் நிறுவனங்களுக்கு தேவைக்கேற்ப பணியாளர்களும் கிடைத்திடும் வகையில் கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் “பாலம்” திட்டத்தை சிறந்த திட்டமாக அங்கீகரித்து விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் மக்களுக்கு பயன்படும் வகையில் திட்டங்களை செயல்படுத்தும் ஆட்சித்தலைவர்களை அடையாளம் கண்டு அங்கீகரிக்கும் வகையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் விருதுகளை வழங்கி சிறப்பிக்கின்றது. எக்ஸலன்ஸ் இன் கவர்னன்ஸ் அவார்டு (Excellence in Governance Award) என்ற பெயரில் வழங்கப்படும் மேற்படி விருதுகள் 18 பிரிவுகளில் சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்விருதுக்கு 29 மாநிலங்களிலிருந்து வரப்பெற்ற 404 பதிவுகளை PWC கடுமையான நுண்ணிய தேர்வு செயல் முறைகள் மூலம் ஆராய்ந்து அதிலிருந்து திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய 18 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேற்படி தேர்வுக்குழுவில் முன்னாள் தலைமை நீதிபதி லோதா, சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் முன்னாள் தலைவர் வஜாஹத் ஹபிபுல்லா, முன்னாள் வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் மற்றும் முன்னாள் கேபினட் செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் இடம் பெற்று சிறந்த திட்டங்களுக்கான விருதுகளை அறிவித்துள்ளார்கள். அதில் எங்களுடைய “பாலம்” திட்டம் சிறந்த திறன் மேம்பாட்டு திட்டதிற்கான விருது பெற்றுள்ளது. கடந்த ஆண்டு தமிழக முதலமைச்சர் அவர்களால் பாலம் திட்டத்திற்கு சிறந்த திறன் மேம்பாட்டு திட்டத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
பாலம் திட்டத்தின் முக்கிய நோக்கம் வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களுக்கும், வேலை தேடுபவர்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பது திறன் இடைவெளி நிலையை நிவர்த்தி செய்ய திறன் பயிற்சியளித்து, திறன் பயிற்சி முடித்தவர்களுக்கு தேவையின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவதாகும். மேலும் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தில் (Woman livilihood Service Centre) மூலம் தொழில் முனைவோருக்கு வழிகாட்டியாகவும் செயல்பட்டு வருகிறது. பாலம் திட்டத்தின் கீழ் நாளது தேதிவரை 35 வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே வேலை தேடும் பெண்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து பணிக்கு செல்லும் பயண தொலைவு அதிகமாக இருக்கும் காரணத்தினால் பணிக்கு செல்வதில் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனை தவிர்க்கும் பொருட்டு கரூர் மாவட்டத்தில், 8 வட்டாரங்களிலும் தையல் தொழில் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி அலகினை (Satellite unit) அமைக்கும் பணியில் முதற்கட்டமாக க.பரமத்தி (SBGF கட்டிம்), தென்னிலை (SBGF கட்டிம்) மற்றும் அஞ்சூர் (SBGF கட்டிம்) ஆகிய ஊராட்சிகளில் 01.07.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒரு திட்டத்தை ஆய்ந்து அறிவிப்பில் உள்ள சிக்கல்களை காட்டிலும் அதை களத்தில் வெற்றிகரமாக செயல்படுத்துவதில் பல்வேறு இடர்பாடுகளை கடக்க வேண்டிய சூழல் உருவாகும் அப்படி அனைத்தையும் கடந்து ஒரு வெற்றிகரமான திட்டமாக “பாலம்” திட்டம் கரூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் செயல்படுத்துவதற்கு காரணமான அனைவருக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.