இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது பாரத ரத்னா. எந்த துறையாக இருந்தாலும் அதில் உயரிய சேவை புரிந்தவர்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது. அரசியல், கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள் போன்றோருக்கு பாரத ரத்னா வழங்கப்படுகிறது. 


பாரத ரத்னா விருது அறிவிப்பு:




அந்த வகையில், மறைந்த பிகார் முதலமைச்சர் கர்பூரி தாக்கூருக்கு இந்தாண்டுக்கான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1924ஆம் ஆண்டு, ஜனவரி 24ஆம் தேதி, பிகார் மாநிலத்தில் பிறந்தவர் கர்பூரி தாக்கூர். இவர், மக்களுக்கு ஆற்றிய தொண்டின் காரணமாக மக்கள் தலைவர் என அன்போடு அழைக்கப்படுகிறார்.


பிகார் மாநில முதலமைச்சராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். கடந்த 1970ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 1971 ஆண்டு ஜூன் மாதம் வரை, சோசலிஸ்ட்/பாரதிய கிராந்தி தளம் ஆட்சியில் முதல்முறை முதலமைச்சராக பதவி வகித்தார். பின்னர், 1977ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 1979 ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஜனதா ஆட்சியின் கீழ் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவி வகித்தார்.


பிகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள பிடவுஞ்சியா (இப்போது கர்பூரி கிராம்) கிராமத்தில் நை சமூகத்தில் பிறந்த கர்பூரி தாகூர், தனது மாணவப் பருவத்தில் சுதந்திர போராட்ட உணர்வினால் ஈர்க்கப்பட்டார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 26 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு, அரசியலில் நுழைவதற்கு முன்பு ஆசிரியராகப் பணியாற்றினார். 


ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய கர்பூரி தாக்கூர்:


ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய இவர், நில சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என வாழ்நாள் முழுவதும் போராடினார். முதலில் அமைச்சராகவும் பின்னர் துணை முதலமைச்சராகவும் பதவி வகித்தார். 1970 இல் பிகாரின் முதல் காங்கிரஸ் அல்லாத முதலமைச்சரானார். தனது ஆட்சி காலத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தினார். அதுமட்டும் இன்றி, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை கட்டினார்.


இந்தி மொழியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். பிகார் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது, மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தில் கட்டாய ஆங்கில படிப்பை திரும்ப பெற்றார். அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார்.


கடந்த 1975 முதல் 1977ஆம் ஆண்டு வரை, எமர்ஜென்சியின் போது, ​​ஜனதா கட்சியின் மற்ற தலைவர்களுடன் சேர்ந்து, கர்பூரி தாக்கூர் பல்வேறு அகிம்சை போராட்டங்களை முன்னெடுத்தார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வருவதில் ஜனதா கட்சியில் பிரச்னை வெடிக்க தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் கர்பூரி தாக்கூர்.


அரசியல் சவால்களுக்கு மத்தியில் கர்பூரி தாக்கூர் சமூக நீதிக்கான தனது அர்ப்பணிப்பை இறுதி மூச்சு வரை தொடர்ந்தார். சம்யுக்த சோசலிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்து வந்தார். 1978இல் அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினார்.