193 உறுப்பு நாடுகள் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் ஆறு உறுப்பு அமைப்புகளில் ஒன்றாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் விளங்குகிறது. கடந்த 1945ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, உலக நாடுகள் மத்தியில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. 


ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில்:


சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுவதன் மூலம் உறுப்பு நாடுகளுக்கு இடையே இணக்கமான உறவுகளை மேம்படுத்த இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களாக அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, சீனா ஆகிய நாடுகள் இருக்கின்றன.


அல்பேனியா, பிரேசில், காபோன், கானா, இந்தியா, அயர்லாந்து, கென்யா, மெக்சிகோ, நார்வே, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக உள்ளனர். இதில், நிரந்தர பிரதிநிதியாக ஆக இந்தியா தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 


எலான் மஸ்க் கேள்வி?


இந்த நிலையில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில்  இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்று உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா, எக்ஸ் நிறுவனங்களின் சிஇஓ எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதுகுறித்து,  அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் தளத்தில், ””ஒரு கட்டத்தில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் மறுசீராய்வு செய்யப்படும் தேவைகள் இருக்கும். பிரச்சனை என்னவென்றால், கூடுதல் அதிகாரம் பெற்றுள்ள நாடுகள் தங்கள் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை.  






உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தாலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கொடுக்கப்படவில்லை.  இது மிகவும் ஆபத்தமானது. ஆப்பிரிக்காவுக்கும் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


முன்னதாக, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின்  பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸும்  தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, "பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் குழுவில் ஆப்பிரிக்கா கண்டத்தைச் சேர்ந்த எந்த நாட்டிற்கும் இடம் இல்லாதததை எவ்வாறு ஏற்றுக் கொள்வது?  ஐ.நா.சபை இன்றைய சூழ்நிலையை பிரதிபலிக்க வேண்டுமே தவிற, 80 ஆண்டுகள் முன்பான சூழ்நிலையை இல்லை" என்றார்.   


ஏன் இந்தியா நிரந்தர உறுப்பினராக முடியவில்லை?


எந்தவொரு நாடும் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக விரும்பினால், ஐந்து நாடுகளும் சேர்ந்து தீர்மானத்தை நிறைவேற்றுவது அவசியம். ஐந்தில் நான்கு நாடுகள் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்குவதற்கு ஆதரவாக இருப்பதாக தெரிகிறது. ஆனால், இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்குவதை சீனா விரும்பில்லை என்று கூறப்படுகிறது. எனவே, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா 8 முறை தேர்வு செய்யப்பட்டு 16 ஆண்டுகள் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.