நாடு முழுவதும் நேற்று மிகவும் பரபரப்பாக பேசப்பட்டச் செய்தி அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு குறித்துதான். இதில் நாட்டின் பிரதமர்  நரேந்திரமோடி குழந்தை ராமர் சிலையை பிரான பிரதிஷ்டை செய்தார். இந்த நிகழ்வுக்காக இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு படையெடுத்தனர். இதற்காக சிறப்பு ரயில்களும் நாடு முழுவதும் இருந்து அயோத்திக்கு இயக்கப்பட்டது. 


ராமர் கோயில் திறப்பு விழா:


இந்த குடமுழுக்கு விழாவிற்கு நாடு முழுவதும் இருந்து சுமார்  எட்டு ஆயிரம் சிறப்பு மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கு ராமர் கோவில் அறக்கட்டளை சார்பாக அழைப்பிதழ்கள் நேரடியாக வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இப்படியான நிலையில், இன்று நடைபெற்ற ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் அவர்களின் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். 


ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள சின்னத்திரை பிரபலங்கள் தொடங்கி, வெள்ளித்திரை பிரபலங்கள் வரை பெரும்பாலானோர் தங்களது கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். இதில் தமிழ்நாட்டில் உள்ள பிரபல தொலைகாட்சியான விஜய் டிவியில் மூலம் பிரபலமடைந்த நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “ இந்தியா முழுவதும் தற்போது ஓங்கி ஒலிக்கும் கோஷம் என்றால் அது ஜெய் ஸ்ரீராம். ஒருபக்கம் ராமர் பிறந்த அயோத்தியில் அவருக்கு கோவில் கட்டிய சந்தோஷம். அதேநேரத்தில், என்ன இருந்தாலும் பாபர் மசூதியை இடித்துத்தானே இந்த கோவிலை கட்டியுள்ளீர்கள் என்ற வருத்தம் ஒருபக்கம். நாம் ஒன்றே ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும்.


இந்தியாவை ஆண்ட மன்னர்கள் தொடங்கி ஆட்சியாளர்கள் வரை அனைவரும் தான் சார்ந்த தான் விரும்பும் மதத்திற்கு கோவில் கட்டுவது வழக்கம். இது ராஜராஜன் காலத்தில் இருந்து இப்போதுவரை உள்ளது. அப்படித்தான் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவிலைக் கட்டியுள்ளார். இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி தனக்கும் ஸ்ரீ ராமருக்கும் பெருமை சேர்க்கும் அளவில் பிரமாண்டமான கோவிலைக் கட்டியுள்ளார். 






மசூதி கட்டுவதற்கும் இடம்:


ஆனால் நமது இந்தியா மதம் சார்ந்த நாடு கிடையாது. வேற்றுமையில் ஒற்றுமை எம்மதமும் சம்மதம் எனக்கூறித்தான் நாம் நமது குழந்தைகளை வளர்க்கின்றோம். நாமும் வளர்ந்து வந்துள்ளோம். இப்போ பாய் வீட்டில் ரம்ஜான் என்றால் இந்து வீட்டிற்கு பிரியாணி வரும். இந்து வீட்டில் விஷேசம் என்றால் பாய் வீட்டிற்கு பலகாரம் போகும். இப்படித்தான் வாழ்ந்துகொண்டு உள்ளோம். இன்றைக்கு அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவிலைக் கட்டிவிட்டோம்.


ஆனால் நீதிமன்றத் தீர்ப்புப்படி மசூதி கட்டுவதற்கு இடம் ஒதுக்கியுள்ளார்கள். இன்றுவரை அந்த மசூதி எழுப்பப்படவில்லை. அந்த இடத்திலும் மிகவும் பிரமாண்டமான மசூதி கட்டப்பட்டு ஒட்டுமொத்த இந்தியர்களும் இந்துக்களும் இணைந்து ஜெய் ஸ்ரீராம் என சத்தமாக முழக்கமிடுவோம்” என பேசியுள்ளார்.