பந்திப்பூர் புலிகள் காப்பக எல்லைக்குட்பட்ட சாமராஜநகர மாவட்டத்தில் உள்ள ஓம்கார் மலைத்தொடருக்கு அருகே புலி தாக்கியதில் 32 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

100 மீட்டர் தூரத்திற்கு இழுத்து சென்ற புலி:

காடுகள் அழிக்கப்படுவதால் பல்வேறு விளைவுகள் ஏற்படுகிறது. குறிப்பாக, வனம் சாராத செயல்களுக்காக வனப்பகுதியை பயன்படுத்தப்படுவது அங்கு வாழும் உயிரினங்களுக்கு பெரும் சிக்கலை தருகிறது. 

வனப்பகுதி, விவசாய நிலமாக மாற்றப்படுவதாலும் அங்கு சாலைகள் கட்டப்படுவதாலும் அங்கு போதுமான உணவு, தண்ணீர் கிடைக்காமல், வனவிலங்குகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு செல்வது தொடர் கதையாகி வருகிறது. இதனால், மனித - வனவிலங்கு மோதல் அதிகரித்து வருகிறது.

Continues below advertisement

கடித்து குதறியதில் துடிதுடித்து இறந்த பெண்:

அதன் தொடர்ச்சியாக கர்நாடக மாநிலத்தில் புலி தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இறந்தவர், சாமராஜநகர் மாவட்டத்தின் குண்டலுபேட்டை தாலுகாவைச் சேர்ந்த புட்டம்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "நேற்று மதியம் அந்தப் பெண் தனது கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. புலி அந்தப் பெண்ணைத் தாக்கி, சம்பவ இடத்திலிருந்து 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது.

புலியை அடையாளம் காண கேமரா:

சம்பவம் குறித்து கிராம மக்கள் அறிந்தவுடன், அவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர். பின்னர், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் உடலை மீட்டனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு, அவரது உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்" என்றார்கள்.

பந்திப்பூர் வனப் பாதுகாவலர் பிரபாகரன், இதுகுறித்து பேசுகையில், "புலி தாக்கியதலில் அந்தப் பெண் இறந்துவிட்டார். தாக்குதலில் ஈடுபட்ட புலியை அடையாளம் காண நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் புலிகளின் நடமாட்டத்தைக் கண்டறிய கண்காணிக்க கேமராவை நாங்கள் நிறுவியுள்ளோம்" என்றார்.

கடந்த 2022ஆம் ஆண்டு, பீகாரில் சிவ்தஹான் மற்றும் கோவர்தன் வனப்பகுதிக்கு அருகே 12 வயது சிறுமி உள்பட 7 பேரை புலி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இதையும் படிக்க: Crime : மயக்க மருந்து இன்றி.. கட்டாயப்படுத்தி.. 32 பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை.. பதைபதைக்க வைத்த கொடூரம்..