பீகாரின் ககாரியா மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 23 பெண்களுக்கு கட்டாயத்தின் பேரில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் மயக்க மருந்து அளிக்காமல் அவர்களுக்கு குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அலௌலி பிளாக்கில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ககாரியா மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான விசாரணையை விரைவில் முடிக்குமாறு மாவட்ட சுகாதாரத்துறை தலைவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ககாரியா மாவட்ட சுகாதார தலைவர் சர்ஜன் அமர்கந்த் ஜா கூறுகையில், "சமீபத்தில், அலௌலியில் உள்ள ஆரம்ப சுகாதார மையம் ஒன்றில் 23 பெண்களுக்கு மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சை மூலம் கருத்தடை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 30 பெண்கள் இந்த செயல்முறைக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டனர்.
ஆனால், ஏழு பேர் அச்சம் காரணமாக மருத்துவமனையை விட்டு வெளியேறி உள்ளூர் மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். மோசமான மருத்துவ அலட்சியம் காரணமாக இது நிகழ்ந்துள்ளது. மயக்க மருந்து இல்லாமல் பெண்களை எப்படி அறுவை சிகிச்சை செய்ய கட்டாயப்படுத்த முடியும்?
மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பிறகே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். விசாரணை நடத்தப்பட்டு, காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து வருகிறோம்" என்றார்.
தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், "அந்த கொடூரமான சம்பவத்தை நான் நினைவில் கொள்ள விரும்பவில்லை. நான் வலியால் கத்தினேன். நான்கு பேர் என் கைகளையும் கால்களையும் இறுக்கமாகப் பிடித்தனர்.
ஆனால், டாக்டர் வேலையை முடித்துவிட்டார். ஆரம்பத்தில், தாங்க முடியாத வலியைப் பற்றி மருத்துவரிடம் கேட்டபோது, அது அப்படிதான் நடக்கும் என்று கூறினார்" என்றார்.
பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் இதுகுறித்து பேசுகையில், "அறுவை சிகிச்சை முழுவதும் சுயநினைவுடன் இருந்தேன். பெரும் வலியை அனுபவித்தேன். ஃபலோபியன் குழாய்களை அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எடுப்பதே tubectomy ஆகும்" என்றார்.
அரசின் நிதி உதவியில் தனியார் நிறுவனம் நடத்தும் முகாமில் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.