பாஜகவின் செல்வாக்கு மிக்க மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கரில், 15 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில்தான் காங்கிரஸ் முதல்முறையாக வெற்றிபெற்றது. அக்கட்சியின் மூத்த தலைவர் பூபேஷ் பாகல் தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இச்சூழலில், சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. 


நாளை மறுநாள் முதல் கட்ட வாக்குப்பதிவும் வரும் 17ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க காங்கிரஸ் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில், பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியானது.


காங்கிரஸ் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்:


தேர்தலுக்கு இன்னும் 1 நாள் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், பல முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளது.


ராஜ்நந்த்கான் நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் பூபேஷ் பாகல், "மாநிலத்தின் பட்டியல் சாதியினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பொதுப் பிரிவினர் மற்றும் சிறுபான்மையினருக்காக கணக்கெடுப்பு நடத்தப்படும்.


சாதிவாரி கணக்கெடுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசியல் ஆதாயத்தை வழங்குவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு சமூக மற்றும் நிதி நன்மைகளை வழங்குவதோடு, சிறப்பு கொள்கையையும் அரசாங்கம் உருவாக்கும். நெல், குவிண்டாலுக்கு ரூ.3,200க்கு வாங்கப்படும். காஸ் சிலிண்டர்கள் கிலோ ரூ.500க்கு விற்கப்படும். 


என்னென்ன சிறப்பம்சங்கள்?


முதல்வர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 17.5 லட்சம் பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும். கேஜி முதல் முதுநிலை வரை கல்வி இலவசம். 10 ரூபாய் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வழங்கப்படும். தற்போது, தொழில் செய்வதற்கு 40 சதவீத கடன் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது, 50 சதவீதம் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும்" என்றார்.


பெண்களை குறிவைத்து தயாரிக்கப்பட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. திருமணமான பெண்களுக்கும் நிலம் இல்லாத விவசாய கூலிகளுக்கும் நிதியதவி வழங்கப்படும் என்றும் நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு 3,100 ரூபாய் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஏழை குடும்பங்களுக்கு 500 ரூபாய் கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.


சத்தீஸ்கரில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் காலியாக உள்ள ஒரு லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்பப்படும் என்றும் மாநில மக்களை ராமர் கோயிலுக்கு அழைத்துச் செல்வோம் என்றும் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.


இதையும் படிக்க: PM Modi Poverty : "புத்தகத்த படிச்சு வறுமைய கத்துக்கவேண்டிய அவசியம் எனக்கில்ல" மக்கள் முன்பு பிரதமர் மோடி உருக்கம்