ஊருக்கு உபதேசம் செய்வது எளிது... அது நமக்கென வரும் போது அதை கடைபிடிப்பது சில நேரம் சிரமமாகிப் போகிறது. உபதேசம்... இவர் தான் சொல்வதென்று இல்லை... எல்லோரிடத்திலும் அதிகம் வரும். அதிலும் அதி அதிகம் வருவது போலீசாரிடம் தான்.


காரணம்... விதிகளை கூறி தண்டிப்பவர்கள், கண்டிப்பவர்கள் அவர்கள் தான். அதனால் தான், அவர்களின் உபதேசத்தை, அவர்கள் மீறும் போது அதிகம் விமர்சிக்கப்படுகிறது. அவ்வாறு விமர்சிக்கப்படுவதில் நாடு தேசம், மொழி, இனம் கடந்து போலீசார் மீது அனைவருமே ஒருமாதிரியான கருத்தை முன்வைக்கின்றனர். 

நாம் பார்க்கும்  இந்த வீடியோவும் அப்படி தான். 



கர்நாடகாவில் பெண் ஒருவர், போலீசாரின் விதிமீறலை விரட்டி விரட்டி வீடியோ எடுத்து அவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அது என்ன அறிவுரை என்று தானே கேட்கிறீர்கள். கர்நாடகாவில் ஹெல்மெட் அணியும் விதிமுறை கடுமையாக பின்பற்றப்படுகிறது. 

அதனால் பாதிக்கப்பட்ட பெண்ணாக அவர் இருக்கலாம். தங்களுக்கு அறிவுரை கூறும் போலீசார், அதை பின்பற்றுவதில்லை என்பதை வெளிப்படுத்த அவர் திட்டமிட்டிருக்கலாம். அப்படி தான் அவர் அந்த காரியத்தில் இறங்கியுள்ளார். 

ஒரு ஸ்கூட்டரில் 3 பெண் காவலர்கள் வருகின்றனர். ஒருவர் கூட ஹெல்மெட் அணியவில்லை. நேராக, தைரியமாக அவர்களிடம் செல்லும் அந்த பெண், ‛ஹெல்மெட் போடனும் சொல்ற நீங்க... அந்த விதியை பின்பற்ற மாட்டீங்களா... வந்ததே ட்ரிபிள்ஸ்... அதுல ஒருத்தரும் ஹெல்மெட் போடல. இது தான் நீங்க ரூல்ஸ் பாலோ பண்ற லட்சணமா..’ என கேள்விகளை சரமாறியாக முன்வைக்கிறார்.


 

அவர் வீடியோ எடுப்பதை அறிந்த அந்த பெண் காவலர்கள், கீழே இறங்கி எஸ்கேப் ஆகின்றனர். அதே போல, டபுள்ஸ் வந்த இரு பெண் காவலர்களை வழிமறிக்கும் அந்த பெண், அதே கேள்விகளை அவர்களிடமும் முன் வைக்கிறார். வாகன கூட்டம் நடந்த அந்த பகுதியில் அந்த பெண் கேட்ட கேள்விளுக்கு பதில் சொல்ல முடியாமல்... பதிலும் பேச முடியாமல் பெண் போலீசார் வாயடைத்து எஸ்கேப் ஆவதை, சக வாகன ஓட்டிகள் ரசித்து பார்க்கின்றனர். 

ஹெல்மெட் அணிவது யாரையும் திருப்திப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கை இல்லை. நம்மையும், நம்மை நம்பியிருக்கும் குடும்பத்தை பாதுகாக்கும் விசயம். அதிகாரம் நம்மிடம் இருப்பதால், ஆபத்து நம்மை நெருங்காது என யாரும் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. அது தான் இந்த செய்தியின் நோக்கமும் கூட!