கர்நாடக மாநில அரசு கடந்த ஜனவரி 21 அன்று, கொரோனா தொற்று காரணமாக வார இறுதியில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவை நீக்கி அறிவித்துள்ளது. கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனைக் குழுவுடன் சந்தித்த பிறகு இந்த முடிவை அறிவித்துள்ளார். இந்தச் சந்திப்பில் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் முதலானோர் கலந்து கொண்டனர்.
சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதை நீக்குவதாக அறிவித்த மாநில வருவாய்த்துறை அமைச்சர் அசோகா, மாநிலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை தற்போதைய 5 சதவிகிதத்தை விட அதிகரித்தால், மாநில அரசு மீண்டும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் எனக் கூறியுள்ளார். `நான் மக்களிடம் கவனமாகவும், கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் வேண்டிக் கொள்கிறேன். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள முடிவு நிபந்தனைகளுடன் எடுக்கப்பட்டிருக்கிறது. மாநிலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 5 சதவிகிதத்தைத் தாண்டினால், மீண்டும் வார இறுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்’ என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இரவு நேர ஊரடங்கு தொடரும் எனக் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. `மாநிலம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலான இரவு நேர ஊரடங்கு தொடரும். மதுபான விடுதிகள், உணவகங்கள் ஆகியவை 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இயங்கும். ஆர்ப்பாட்டம், அரசியல் நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கான கட்டுப்பாடுகள் தொடரும்’ என அமைச்சர் அசோகா கூறியுள்ளார்.
மேலும் அவர் ஆலோசனைக் குழுவுடனான சந்திப்பில், மாநிலத்தின் சுகாதாரக் கட்டமைப்பு சீராக இயங்கி வருவதாகவும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், ஐ.சி.யுவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, அடுத்தடுத்த வாரங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் பேசப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 20 அன்று கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்ததற்குப் பிறகு, அம்மாநில அரசு இந்த முடிவை அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி 20 அன்று, கர்நாடகாவில் ஒரே நாளில் 47 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்; 29 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஜனவரி 18 அன்று இந்த எண்ணிக்கை 41 ஆயிரம் எனவும், ஜனவரி 19 அன்று இந்த எண்ணிக்கை 40 ஆயிரம் எனவும் கணக்கிடப்பட்டிருந்தது. தற்போது கர்நாடகா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை சுமார் 2.93 லட்சமாக உயர்ந்துள்ளது.