உள்நாட்டு விமானத்தில் ஒரு பயணி ஒரு ஹேண்ட் லக்கேஜ் மட்டுமே எடுத்துச் செல்லலாம் என புதிய விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமானப் போக்குவரத்து ஆணையம் Bureau of Civil Aviation (BCAS) விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் உள்நாட்டுப் பயணிகள் இந்த விதிமுறையை தவறாமல் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பிசிஏஸ் செயலர் சுற்றறிக்கை எண்கள் 06/2000 & Lt12000 வாயிலாக இதனைத் தெரிவித்திருக்கிறார். ஒரு கைப்பை என்பது பெண்கள் கையில் வைத்திருக்கும் கைப்பையைத் தாண்டியது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பயணிகள் 3க்கும் மேற்பட்ட கைப்பைகளை கேபினுக்குள் எடுத்துச் செல்வதாக அண்மைக்காலமாகவே நிறைய புகார்கள் வருகின்றன. இவ்வாறு எடுத்துச் செல்வதால் லக்கேஜ் க்ளியரன்ஸ் நேரம் அதிகரிப்பதாகவும், பயணிகள் உடைமைகளைப் பரிசோதனைக்குப் பின்னர் பெறும் இடமும் கூட்டமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே அனைத்து விமான நிலையங்களுக்கு, விமான நிறுவனங்களுக்கு பிசிஏஸ் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை விமான டிக்கெட்டுகளில் பதிவிடுவதோடு, விமானிகள் பார்க்கும்படி விளம்பரப் பதாகைகளும் வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. போடிங் பாஸ்களிலும் ஒரு பயணிக்கு ஒரு கைப்பை என்ற விதிமுறையை டைப் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.
செக் இன் கவுன்ட்டர்கள், எஸ்ஹெச்ஏ எனப்படும் பாதுகாப்பு இடங்களிலும் விளம்பரப் பதாகைகள், ஸ்டாண்டீஸ்கள் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
7 கிலோவை விட குறைவான எடை கொண்ட hand baggage மட்டுமே பயணிகள் கொண்டு செல்ல அனுமதி உண்டு. checkin baggage சாமான்கள் 23 கிலோவுக்கு மேல் இருக்கக்கூடாது. உங்கள் சாமான்களில் 23 கிலோவுக்கு மேல் சாமான்கள் இருந்தால், அதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். அந்தக் கட்டணம் விமான நிறுவனத்திற்கு ஏற்ப வேறுபடும். ஒவ்வொரு ஆப்பரேட்டரும் ஒவ்வொரு மாதிரியாக கட்டணம் வசூலிப்பர்.
சிகரெட் பற்ற வைக்க பயன்படும் லைட்டர்கள், கத்திரிக்கோல், கூர்மையான முனை கொண்ட உலோகங்கள், உண்மையான ஆயுதங்களை போல இருக்கும் பொம்மைகள் ஆகிய பொருட்களை விமானத்தில் கொண்டு செல்லக்கூடாது. பேஸ்பால் மட்டைகள், கிரிக்கெட் மட்டை, கோல்ப் மற்றும் ஹாக்கி குச்சிகள் , ஸ்பியர் கன்ஸ் ஆகியனவற்றிற்கும் அனுமதியில்லை.
பேட்டரி உதவியுடன் இயங்கும் சக்கர நாற்காலிகள், உலர்ந்த பனிக்கட்டி,கையில் எடுத்துச் செல்லக் கூடிய மருத்துவ மின்னணு உபகரணங்கள் உள்ளிட்டவை உள்ளூர் ஒழுங்குமுறை விதிகளைப் பொறுத்து முன் அனுமதியுடன் எடுத்தச் செல்ல முடியும்.
விமானப் பயணத்தின் போது இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டால் தேவையற்ற அசவுகரியங்களைத் தவிர்க்கலாம்.