பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. சமீபத்தில், ஷ்ரத்தா கொலை வழக்கு நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது.
ஷர்த்தா கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே உத்தரப் பிரதேசத்திலும் மேற்குவங்கத்திலும் அதே போன்ற கொலை கொடூரம் சம்பவங்கள் அரங்கேறின. பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடத்தப்படுவதாக அதிர்ச்சி அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் நன்கு தெரிந்த ஒருவராலேயோ அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவராலேயோ ஒரு பெண்/சிறுமி கொல்லப்படுகிறார் என ஐநா செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
கர்நாடகாவை பதறவைக்கும் கொலைகள்:
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் உடுப்பியில் இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணை கொலை செய்தது மட்டும் இன்றி அவரது தாய்,சகோதரி மற்றும் சகோதரரை குற்றவாளி கொலை செய்துள்ளார்.
மங்களூரு விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்காக அய்னாஸ் பணிபுரிந்து வந்துள்ளார். இவரின் மீது அதே விமான நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பிரவீன் அருண் சௌகுலே என்பவருக்கு பகை இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அய்னாஸை கொலை செய்வதற்காக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார் பிரவீன் அருண் சௌகுலே. அங்கு, அய்னாஸின் தாயார் ஹசீனா (47), சகோதரி அப்னான் (23), தம்பி அசீம் (21) ஆகியோரையும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் பிரவீன் அருண்.
ஹசீனாவின் மாமியாரையும் கடுமையாக தாக்கியுள்ளார். இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "விமான நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த பிரவீன் அருண் சௌகுலே என்ற நபர் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைகளை செய்துவிட்டு உறவினர்களுடன் தங்கியிருந்த அவர் பெலகாவியில் உள்ள குடாச்சியில் வைத்து கைது செய்தோம்.
நடந்தது என்ன?
மொபைல் டவர் இருப்பிடத் தகவல், அழைப்பு தரவு பதிவுகள் உள்ளிட்ட தொழில்நுட்ப தரவுகளின் அடிப்படையில் சந்தேக நபரைக் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். வார இறுதியில் விடுமுறை நாளை கழிப்பதற்காக உடுப்பிக்கு மங்களூருவில் இருந்து வீடு திரும்பினர்.
முந்தைய நாள் இரவுதான் இவர்கள் இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர். அதே சமயத்தில், கொலையாளி காலையில் வந்திருக்கிறார். எனவே, முதன்மையான இலக்கு யார் என்பதைக் கண்டறிய முயற்சிக்கிறோம். மூத்த மகள் அய்னாசுக்கு பணியிடத்தில் பகை ஏதும் இருக்கிறதா என்ற கோணத்தில் ஆய்வு செய்து வருகிறோம்.
கொலைகளை செய்துவிட்டு, ஒன்னுமே நடக்காதது போல தனது தாய்வழி உறவினர்களுடன் தீபாவளியைக் கழிக்க பெலகாவியில் உள்ள குடாச்சிக்குச் சென்றுள்ளார் பிரவீன் அருண்" என கூறியுள்ளது.
மேலும், பிரவீன் அருணும் அய்னாஸும் திருமணத்திற்கு முன்பு காதலித்து வந்ததாகவும் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ப்ரவீன் அருணுக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.