கர்நாடகாவில் மனநலம் பாதிக்கப்பட்ட பிச்சைக்காரரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.
வாழும் காலத்தில் அந்த நபர் ஒரு ரூபாய்க்கு மேல் யாரிடமும் யாசகம் பெற்றதே இல்லையாம். அவருக்கு பிச்சையிடுவதால் தங்களுக்கு நல்லது நடக்கும் என அந்த ஊர்க்காரர்கள் முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளனர். எல்லோரிடமும் நேசமாக நடந்து கொள்ளும் அந்த பிச்சைக்காரரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
கர்நாடகா மாநில பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பசவா என்ற ஹச்சா பாஸ்யா (45). இவருக்கு மனநல பாதிப்பு உண்டு. நீண்ட காலமாகவே அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்துவந்த அவர் வருவோர், போவோரிடம் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார். அவர் யாரிடமும் அதிகமாக யாசகம் பெற மாட்டார். ஒரு ரூபாய்க்கு மேல் யார் கொடுத்தாலும் அதைப் பெற்றுக் கொள்ள மாட்டார். எல்லோரையும் அப்பாஜி என அன்பாக அழைப்பார். அந்தப் பகுதி மக்கள் அவருக்கு யாசகம் போடுவதை விருப்பத்துடன் செய்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சாலை விபத்து ஒன்றில் சிக்கி பசாவா உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது இறுதிச் சடங்கை அந்தப் பகுதி மக்களே ஏற்று நடத்தினர். ஆயிரக்கணக்கானோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். பசவா என்ற பசவைய்யா அந்தப் பகுதி மக்களுக்கு மட்டுமல்ல சில அரசியல்வாதிகளுக்கு பரிச்சியப்பட்டிருக்கிறார். முன்னாள் துணை முதல்வர் எம்.பி.பிரகாஷ், முன்னாள் அமைச்சர் பரமேஸ்வர நாயக் ஆகியோரிடமும் சகஜமாகப் பேசக் கூடியவர். அமைச்சர் என்றால் என்ன என்ற தொணியில் ரொம்பவே சகஜமாக அதே வேளையில் அப்பாவிட்தனத்துடன் பேசுவார். அவர்களுமே, பசவாவுக்கு பிச்சையிடுவது தங்களுக்கு நல் வாய்ப்புகளை, ஆசிகளைக் கொண்டு வரும் என நம்பியதாகக் கூறப்படுகிறது.
பசவாவின் மறைவையடுத்து அவரது ஊடகங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பிச்சை எடுத்துதான் பசவா வாழ்ந்தார். ஆனால், மரணம் அவரை ஹீரோவாக்கிவிட்டது. நல்ல செயல்களுக்கு ஒலிப்பெருக்கி தேவையில்லை. நல் ஆத்மா சாந்தியடையட்டும் என்று ஒரு பதிவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இன்னொருவர், பசவாவின் இறுதிச் சடங்கை மக்களே ஏற்று நடத்தியதன் மூலம் மனிதம் இன்னும் இருக்கிறதை என்பதை நிரூபித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றுமொருவர், பசவாவுக்கு மரியாதை செய்தோருக்கு தலைவணங்குகிறேன். அன்பிற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. நமது மனிதநேயம் தான் நமது அடையாளம் என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
பிச்சைக்காரர்களை ஒட்டி நாம் பல செய்திகளைப் படித்திருப்போம். பிச்சைக்காரர் படுக்கையின் கீழ் இருந்த ஆயிரக்கணக்கான பணம். பிச்சை பெற்ற காசில் கொரோனா நிதி கொடுத்த முதியவர் என்றெல்லாம் படித்திருப்போம். ஆனால், ஒரு பிச்சைக்காரரின் மறைவுக்கு ஊரே துக்கம் கடைப்பிடித்து, இறுதிச் சடங்கை செய்ததைக் கேட்டிருக்க மாட்டோம், பார்த்திருக்க மாட்டோம்.