கர்நாடகாவில், எஸ்எஸ்எல்சி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக, தேர்வில் பாஸ் மார்க் குறைக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக அவர்கள் 33 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது என கூறப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சரி, அது எங்கே என்பதை தற்போது பார்க்கலாம்.

“ஒவ்வொரு பாடத்திலும் 30 மதிப்பெண்கள் பெற்றால் போதும்“

இந்த மாதத்தின் தொடக்கத்தில், கர்நாடக பள்ளி தேர்வு மற்றும் மதிப்பீட்டு வாரியம், சிபிஎஸ்இ-க்கு இணையாக எஸ்எஸ்எல்சி(SSLC) தேர்வு முறையை கொண்டுவருவதற்காக, ஒரு திட்டத்தை கர்நாடக அரசிடம் சமர்ப்பித்தது.

அதன்படி, எஸ்எஸ்எல்சி, அதாவது 10-ம் வகுப்பு தேர்வில், மொத்தம் 625 மதிப்பெண்களில், குறைந்தது 206 மதிப்பெண்களை பெற்றாலே, ஒரு மாணவர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.

இதை வைத்து பார்த்தால், ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 30 சதவீத மதிப்பெண்கள் பெற்றாலே போதும். மேலும், ஒட்டுமொத்த மதிப்பெண்களின் சராசரி 33 சதவீதம் இருந்தால் போதும் என்ற விதிமுறை முன்மொழியப்பட்டது.

இதற்கு முன்னர், ஒரு பாடத்தில் 35 மதிப்பெண் பெற வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. அதே நேரத்தில், ஒட்டுமொத்த மதிப்பெண்களின் சராசரி என்ற கண்க்கீடு இல்லாமல் இருந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான், கர்நாடக பள்ளித் தேர்வு மற்றும் மதிப்பீட்டு வாரியம் அரசிடம் தனது திட்டத்தை சமர்ப்பித்தது. இந்த முன்மொழிவை, கர்நாடகாவில் உள்ள தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளின் தொடர்புடைய நிர்வாகங்கள் வரவேற்றன. 

பரிந்துரையை ஏற்ற கர்நாடக அரசு

இந்நிலையில், கர்நாடக பள்ளி தேர்வு மற்றும் மதிப்பீட்டு வாரியம் கொடுத்த பரிந்துரையை ஏற்ற கர்நாடக அரசு, முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, எஸ்எஸ்எல்சி-யில் ஒரு பாடத்தில் 35 மதிப்பெண்களுக்கு பதிலாக 30 மதிப்பெண் எடுத்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இன்டர்னலை சேர்த்தால், 33 மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மொத்த மதிப்பெண்களை பொறுத்தவரை, 625 மதிப்பெண்களில் 206 மதிப்பெண்களை எடுத்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளளது.

இந்த அறிவிப்பு மாணவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பல்வேறு தரப்பினரும் இந்த நடைமுறைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், இந்த நடைமுறை மற்ற வாரியங்களுக்கு சமமாக இருப்பதை உறுதி செய்வதற்காக எஸ்எஸ்எல்சி-யில் முதல் மொரிக்கான மதிப்பீட்டு மதிப்பெண்ணை 125-ல் இருந்து 100-ஆக குறைப்பதைப் பற்றியும் அரசு பரிசீலிக்க வேண்டும் என, கர்நாடக ஆங்கில வழிப் பள்ளிகளின் சங்க நிர்வாகங்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது, எஸ்எஸ்எல்சி மதிப்பெண்களில் செய்யப்பட்டுள்ள மாற்றம், வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வர உள்ளது குறிப்பிடதத்தக்கது.