Journalists Pension: பீகாரில் பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், இனி கூடுதலாக 15 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்களுக்கு ரூ.15,000

பீகாரில் பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியத்தை 15 ஆயிரமாக உயர்த்தி, மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். ”பீகார் பத்திரகார் சம்மன் பென்ஷன்” திட்டம் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தகுதியான பத்திரிகையாளர்கள் அனைவருக்கும், இதுநாள் வரை வழங்கப்பட்ட ரூ.6,000-த்துடன் கூடுதலாக ரூ.9,000 சேர்த்து இனி ரூ.15 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

நிதிஷ்குமார் பெருமிதம்:

இதுதொடர்பாக நிதிஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பீகார் பத்திரகார் சம்மான் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் ரூ.6,000 க்கு பதிலாக ரூ.15,000 மாதாந்திர ஓய்வூதியம் வழங்க துறைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரிகையாளர்கள் ஜனநாயகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் மற்றும் சமூக வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளனர். பத்திரிகையாளர்கள் தங்கள் பணியை பாரபட்சமின்றிச் செய்யவும், ஓய்வுக்குப் பிறகு கண்ணியத்துடன் வாழவும் ஆரம்பத்திலிருந்தே அவர்களின் வசதிகளை நாங்கள் கவனித்து வருகிறோம்” என தெரிவித்துள்ளார். 

கணவரை இழந்தோருக்கு ரூ.10,000

அதே பதிவில், “இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று வரும் பத்திரிகையாளர் உயிரிழந்துவிட்டால், அவரது மனைவிக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.3,000 என்ற உதவித்தொகைக்கு பதிலாக ரூ.10,000 வழங்கவும் அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாக” நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். 

தேர்தல் சலுகைகள்:

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களை கருத்தில் கொண்டு, நிதிஷ்குமார் பல நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். முன்னதாக, வீட்டு பயன்பாட்டிற்கான முதல் 125 யூனிட் மின்சாரத்திற்கு இனி கட்டணமே வசூலிக்கப்படாது என அண்மையில் அறிவித்தார். இலவச மின்சாரத்தின் நிதி தாக்கத்தைக் குறைக்க, வீட்டின் கூரை மீது பொருத்தப்படும் சூரிய மின் தகடுகள் மற்றும் தொடர்புடைய உபகரணங்களுக்கு, மத்திய அரசு உதவியுடன் 50% மானியம் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

கூட்டணியை மாற்றி மாற்றி முதலமைச்சர் பதவியை தக்க வைத்து வரும் நிதிஷ்குமார் மீது பீகார் மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை பலவீனமாக்கி, மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே, மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவின் உதவியுடன் நிதிஷ்குமார் பல கவர்ச்சிகரமாக திட்டங்களை அறிவித்து வருகிறாராம். தனிப்பெரும்பான்மை இல்லாத பாஜகவிற்கு மத்தியில் ஆட்சியை உறுதி செய்ய நிதிஷ்குமார் ஆதரவு அவசியமாக உள்ளது. அதனால், அவருக்கான உதவிகளை தயங்காமல் பாஜக செய்வதோடு, பட்ஜெட்டின் போது நிதியை வாரி வழங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது.