கன்னடர்ளுக்கு தனியார் நிறுவனங்களில் ஒடஒதுக்கீடு வழங்கும் வகையில் கர்நாடக காங்கிரஸ் அரசு கொண்டு வந்த மசோதா பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அம்மாநில அரசு கொண்டு வந்துள்ள மற்றொரு மசோதா பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


உயர்த்தப்படுகிறதா ஐடி ஊழியர்களின் வேலை நேரம்? தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்களுக்கான வேலை நேரத்தை ஒரு நாளைக்கு 14 மணி நேரமாக உயர்த்த கர்நாடக அரசு திட்டமிட்டு வருகிறது. பணி நேரத்தை உயர்த்தும் வகையில் கர்நாடக கடைகள் மற்றும் வணிக ஸ்தாபன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.


இது தொடர்பாக கருத்துகளை கேட்க கர்நாடக தொழில்துறை அமைச்சகம் சார்பில் ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், கர்நாடக தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் எஸ். லாட், தொழிலாளர் துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, உயிரி தொழில்நுட்பத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 


அதோடு, தொழில்துறையை சேர்ந்த பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். சட்டத்திருத்தம் தொடர்பாக அவர்களிடம் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வரும்பட்சத்தில், ஐடி ஊழியர்களின் வேலை நேரம் வாரத்திற்கு 70 மணிநேரமாக உயர்த்தப்படும்.


தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு: நாட்டின் தகவல் தொழில்நுட்பத்துறையின் மையமாக உள்ள கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சித்தராமையா தலைமையிலான அரசு, இதுதொடர்பாக இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.


ஆனால், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள கர்நாடக மாநில ஐடி ஊழியர்கள் சங்கம், "14 மணி நேர வேலை நாளை இந்த சட்டத்திருத்தம் இயல்பாக்க முயற்சிக்கிறது. தற்போதுள்ள சட்டம், கூடுதல் நேரம் உட்பட ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 10 மணிநேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கிறது.


தற்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்திருத்ததில் இது திரும்ப பெறப்பட உள்ளது. இது ஐடி நிறுவனங்களுக்கு தினசரி வேலை நேரத்தை காலவரையின்றி நீட்டிக்க உதவும். இந்த சட்டத்திருத்தம், கடந்த 10 ஆண்டுகளில் தொழிலாளர் வர்க்கத்தின் மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்.


தற்போது இருக்கும் மூன்று-ஷிப்ட் முறைக்கு பதிலாக இரண்டு-ஷிப்ட் முறைக்கு நிறுவனங்கள் செல்ல இது அனுமதிக்கும். இதனால், மூன்றில் ஒரு பங்கு பணியாளர்கள் தங்கள் வேலையில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.


வேலை நேரத்தை உயர்த்துவதால் தொழிலாளர்கள் உடல் ரீதியாக பாதிக்கப்படுவார்கள் என்பதையே பல ஆய்வறிக்கைகள் குறிப்பிடுகின்றன" என குறிப்பிட்டுள்ளது.