கர்நாடகாவில் உள்ள மஹிந்திரா கார் விற்பனை நிலையத்தில் சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.   


கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மஹிந்திரா ஷோரூமில் 'பிக்கப் டிரக்' ரக காரை பார்வையிடுவதற்கு கெம்பேகவுடா மற்றும் அவரது சகாக்களும் சென்றுள்ளனர். இவர்கள், அனைவரும் விவசாயத் தொழில் செய்து வருகின்றனர். ஆடை, பேச்சு மற்றும் பிற சமூக  ஒழுக்கக் கோட்பாடுகளின் மூலம் இவர்களை ஷோரூமின் விற்பனையாளர்கள் குறைத்து  மதிப்பீடு செய்துள்ளனர். நீங்கள் வாங்க இந்த வாகனம் ஒன்றும் 10 ரூபாய் சமாச்சாரம் இல்லை, இதன் மதிப்பு ரூபாய் 10 லட்சத்தைத் தாண்டும். நீங்கள் இங்கிருந்து முதலில் கிளம்பலாம். மேலும் , உடனடியாக 10 லட்சம் ருபாயைக் காண்பித்தால், அரைமணி நேரத்தில் உங்கள் வீட்டிற்கே விநியோகம் செய்து விடுகிறோம் என்று எள்ளி நகையாடியுள்ளனர்.   


 






   


பெரும் கேலி, கிண்டல்களுக்கும் ஆளான கெம்பேகவுடா மற்றும் அவரது சகாக்கள் விற்பனையாளருக்கு பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்தனர். உடனடியாக, விற்பனையாளரிடம் சென்று, காரை முன்பதிவு செய்வதற்கான பணிகளை தொடங்குங்கள். நீங்கள் உறுதியளித்தவாறே, காரை விநியோகம் செய்து விடுங்கள் என்று கூறி தங்கள் நட்பு வட்டாரத்தின் மூலம் ஒருமணி நேரத்தில் ரூபாய் 10 லட்சத்தை திரட்டியுள்ளார். ஆனால், பணியாளர் தனது அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முன்வரவில்லை. காத்திருப்போர் பட்டியலில் உள்ள நபர்களுக்கு முதலில் விநியோகம் செய்து விட்டு, மூன்று நாட்களில் விநியோகம் செய்து விடுவதாக தெரிவித்துள்ளனர்.  


                                   


 


இதனால், ஆத்திரம் அடைந்த  கெம்பேகவுடா, ஷோரூமில் உள்ள பணியாளர்களிடம் தனது பக்க நியாயத்தை மிகவும் ஆவேசமாக எடுத்துரைத்தார். மேலும், உறுதி அளித்தவாறே கார் விநியோகம் செய்யப்படவிலை என்றால், காவல்துறையை அணுக இருப்பதாகவும் தெரிவித்தார். நாங்கள் செய்தது தவறாக இருந்தால்,  மன்னிப்புக் கேட்டுகொள்கிறோம். நீங்கள் செய்தது தவறாக இருந்தால், விவசாய பெருங்குடிகளை கீழ்த்தரமாக நடத்தமாட்டோம் என்று பகிரங்கமாக மன்னிப்புக் கேளுங்கள்" என்று தெரிவித்தார். 


இறுதியாக, காவல்துறையின் தலையீட்டின் பேரில் இந்த விவகாரம் சுமூகமாக பேசி தீர்த்துக் கொள்ளப்பட்டது. கார் விற்பனை அதிகாரி விவசாய பெருங்குடிகளிடம் எழுத்துப் பூர்வமாக மன்னிப்பு கோரினார். ஒரு மனிதனின் வலிமையை எவராலும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதை இந்த விவகாரம் மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளது. 'நட்புக்காக'  என்ற தமிழ் சினிமாவில் இதேபோன்ற காட்சிகள் இடம் பெற்றது என்பதை இங்கு நினைவுக் கூறத்தக்கது.