கர்நாடகாவும் மகாராஷ்டிராவும் அண்டை மாநிலங்களாக உள்ளன. கடந்த 1956ஆம் ஆண்டு, மாநில மறுசீரமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு, மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டதில் இருந்தே, இரு மாநில எல்லையில் அமைந்துள்ள பெல்காவி, கர்நாடகவின் ஒரு பகுதியாக உள்ளது.
ஆனால், அந்த காலத்தில் இருந்தே, கர்நாடக, மகாராஷ்டிராவுக்கு இடையே எல்லை பிரச்னை இருந்து வருகிறது. இந்த எல்லை பிரச்னையில் மையமாக பெல்காவி உள்ளது.
இச்சூழலில், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்த கருத்து இரு மாநிலங்களுக்கிடையே மீண்டும் பிரச்னை வெடிக்க காரணமாக அமைந்துள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள ஜாத் தாலுகாவை கர்நாடகாவின் ஒரு பகுதியாக இணைக்க கர்நாடக அரசு முடிவு எடுத்துள்ளதாக அவர் பேசியிருந்தார்.
இதற்கு, மகாராஷ்டிரா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து, இரு மாநில அரசுகளுக்கிடையே எல்லை பிரச்னை வெடித்தது. கடந்த ஒரு மாதமாக, இரு மாநிலங்களுக்கிடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், மகாராஷ்டிராவை சேர்ந்த சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.
கர்நாடகாவில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த சட்டப்பேரவையின் கடைசி குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி 10 நாள்களுக்கு நடைபெறுகிறது. இதற்கு மத்தியில், மகாராஷ்டிரா தலைவர்கள் போராட்டத்தை நடத்த திட்டமிட்டருப்பது பிரச்னையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா தலைவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஹசன் முஷ்ரிப் மற்றும் சிவசேனாவின் கோலாப்பூர் மாவட்டத் தலைவர் விஜய் தேவனே ஆகியோர் இன்று கர்நாடகாவின் பெலகாவியில் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.
300க்கும் மேற்பட்ட சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை எல்லையில் நிறுத்தி கர்நாடகா காவல்துறை திருப்பி அனுப்பியது. மேலும் சிலரை மகாராஷ்டிர போலீசார் கைது செய்தனர்.
50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பிரச்சினையை எழுப்பி வரும் மத்தியவர்த்தி மகாராஷ்டிர ஏகிகரன் சமிதி (எம்எம்இஎஸ்) என்ற அமைப்பினர், கர்நாடக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடருக்கு முன்னதாக மாபெரும் போராட்டங்களைத் திட்டமிட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில், மத்திய அரசு மீது குற்றம்சாட்டியுள்ள மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல், பிரதமர் மோடி இந்தியாவை பிரிக்க முயற்சிப்பதாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "மத்திய அரசால்தான் எல்லைப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி மகாராஷ்டிராவை பிரிக்க விரும்புகிறார்.
முதலமைச்சர்கள், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கிடையே சந்திப்பு நடைபெற்ற பிறகும், தலைவர்கள் ஏன் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை? இந்த விவகாரத்தின் பின்னணியில் மத்திய அரசு இருப்பதையே இது காட்டுகிறது" என்றார்.
இந்த எல்லை பிரச்னையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை, இது தொடர்பான தங்களின் கோரிக்கைகளை எழுப்ப போவதில்லை என இரு மாநில முதலமைச்சர்களும் ஒப்பு கொண்டதாக கடந்த வாரம் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அமித் ஷா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.