பெருந்தொற்றுக்கு பிறகு, அரசு சேவைகளை மக்களிடம் எடுத்து செல்லும் வகையில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, அரசு சேவைகளை பெற வேண்டும் என்றாலே அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது.
ஆனால், தற்போது அந்த சூழல் இல்லை. அனைத்து விதமான அரசு சேவைகளை இணையம் வழியாக பெற்று கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படும் நல்லாட்சி தினத்தை முன்னிட்டு ஒரு வார காலத்திற்கு 3,100 புதிய அரசு சேவைகள் ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கிராமத்தை நோக்கி ஆட்சி முறை என்ற கருப்பொருளில் நாடு முழுவதும் நல்லாட்சி தினத்தை முன்னிட்டு பல்வேறு விதமான நற்செயல்களை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஐந்து நாள்களுக்கு கடைபிடிக்கப்படும் நல்லாட்சி தின பரப்புரையின்போது நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர்களால் அடையாளம் காணப்பட்ட 3,120 புதிய சேவைகள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட உள்ளது.
இதை, மத்திய பணியாளர், மக்கள் குறை கேட்பு மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், டெல்லி விக்யான் பவனில் இன்று தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "நல்லாட்சி வாரத்தின்போது, நாட்டின் குறை தீர்க்கும் தளங்கள் ஒற்றுமையுடன் செயல்படும். மையப்படுத்தப்பட்ட பொதுக் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பில் (CPGRAMS) பெறப்பட்ட குறைகள், மாநில இணையதளங்களில் பெறப்பட்ட குறைகளுடன் நிவர்த்தி செய்யப்படும்.
75ஆவது சுதந்திர தின கொண்டாட்ட காலத்தில் இரண்டாவது முறையாக, மக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கும், தாலுகா அளவில் நாடு முழுவதும் பரப்புரை நடத்துகிறது. எதிர்கால சந்ததியினருக்கு உத்வேகம் அளிக்கும் நல்லாட்சிக்கான தேசிய இயக்கத்தை இந்த பரப்புரை உருவாக்கும்.
டிசம்பர் 10 முதல் 18 வரை நடைபெற்ற நல்லாட்சி வாரத்திற்கான ஆயத்தக் கட்டத்தில், 81,27,944 சேவை வழங்கல் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர்கள் பெற்றுள்ளனர். அதில், 19,48,122 பொது மக்கள் புகார்களை மாநில குறைதீர்ப்பு இணையதளங்கள் மூலம் தீர்க்கப்படும்" என்றார்.
டிசம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ள மாவட்ட அளவிலான பயிலரங்குகளில் விவாதிக்க 373 சிறந்த நல்லாட்சி நடைமுறைகள் கண்டறியப்பட்டுள்ளன என்று நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுக் குறைகள் துறை செயலர் வி. ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்.
அனைத்து மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கும் சேவையை மேம்படுத்துவதற்கும் நாடு தழுவிய பரப்புரை நடைபெற உள்ளது.
700க்கும் மேற்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் இந்த பரப்புரையில் பங்கேற்க உள்ளனர். மேலும், தாலுகாக்கள் மற்றும் பஞ்சாயத்து சமிதி தலைமையகங்களுக்கு அதிகாரிகள் செல்ல உள்ளனர்.