கர்நாடகாவில் அரசுப்பணிகளில் திருநங்கைகளுக்கு ஒரு சதவீத ஒதுக்கீடு செய்யும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
திருநங்கைகள் என்றாலே ஏளமான பார்த்து வந்த சமூகத்தில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு வாழ்க்கையில் தொடர் வெற்றியினை அவர்கள் சந்தித்து வருகின்றனர். திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு வந்திருந்தாலும், பெரும்பாலும் ஒடுக்கப்படும் சூழலிலும் வாழ்க்கையில் எப்படியாவது போராடி ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கும் திருநங்கைகள் இதற்காக பல்வேறு கஷ்டங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக அரசுப்பணிக்கு சேர வேண்டும் நினைத்தாலும் இடஒதுக்கீடுப் பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர். ஆனாலும் நீதிமன்றத்தில் பல போராட்டங்களுக்குப் பிறகு இந்தியாவில் முதல் சப் இன்ஸ்பெக்டராக தமிழகத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகாயாஷினி தேர்வாகினார். அதைப்போன்று திருநங்கை சொப்னா போன்றவர்களும் நீதிமன்றத்தில் மூலம் அரசுப்பணியாற்றி வருகின்றனர். ஆனால் நிரந்தரமான இடஒதுக்கீடு என்பது அவர்களுக்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
இந்நிலையில்தான், கர்நாடகாவில் மாநில சிறப்பு ரிசர்வ் கான்ஸ்டபிள் படையில் மூன்றாம் பாலினத்தவர் சேருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. நீதிமன்றம் சென்றால்தான் இதில் ஜெயிக்க முடியும் என்ற நிலையில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள சங்கமா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றினை தொடர்ந்தது. திருநங்கைகளுக்கு அரசுப்பணியில் இடஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை என தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்காக வந்தது. அப்பொழுது சங்கமா தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், திருநங்கைகளுக்குத் தொடர்ந்து அரசுப்பணியில் இடம் மறுக்கப்படுவதாகவும், முறையாக வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை என தெரிவித்தார். இதனையடுத்து கர்நாடக அரசின் சார்பில் தாக்கல் செய்த மனுவில், அரசுப்பணியில் இட ஒதுக்கீடு செய்வது குறித்து ஏற்கனவே கர்நாடக சிவில் சர்வீஸ் விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, கர்நாடகாவில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி வெளியான அரசாணையின் படி, அனைத்து அரசுப் பணிகளிலும் பொதுப்பிரிவிலும், இதர பிரிவுகளிலும் திருநங்கைகளுக்கு ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது. மேலும் அரசு வேலைத்தொடர்பான விண்ணப்பங்களில் ஆண், பெண் என்ற பிரிவு மட்டுமில்லாமல், மூன்றாம் பாலினத்தவருக்கும் ஒரு பிரிவு சேர்க்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு மட்டுமின்றி அரசுப்பணியில் வேலைக்கு சேர விருக்கும் திருநங்கைகளுக்கு எதிராக எந்தவொரு பாகுபாடும் காட்டக்கூடாது என அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு வழக்கறிஞர நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனையடுத்து இந்த பொது நல வழக்கினை முடித்து வைத்த நீதிபதிகள், அரசுப்பணியில் இந்தியாவில் முதன் மாநிலமாக இட ஒதுக்கீடு செய்த கர்நாடக அரசினை பாராட்டினர்.
இதுவரை எத்தனையோ கடந்து வாழ்க்கையில் ஜெயிக்கவேண்டும் என்று துடிக்கும் திருநங்கைகளுக்கு இச்செய்தி மிகவும் மகிழ்ச்சியாக அமைகிறது. இதோடு 1 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய கர்நாடக அரசிற்கு நன்றி தெரிவிக்கின்றனர். மேலும் அரசுப்பணிகளில் இடஒதுக்கீடு இருப்பது போல் தனியார் நிறுவனங்களிலும் பணிக்கு அமர்த்த வழிவகை செய்யவேண்டும் என்ற கோரிக்கையையும் திருநங்கைகள் முன்வைக்கின்றனர்.