"வரும் ஜூலை 26-ம் தேதியுடன் கர்நாடகாவில் எனது அரசு பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதன்பிறகு கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா முடிவை அறிவிப்பார். அதனை நான் பின்பற்றுவேன்" இது கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் சமீபத்திய பேச்சு.


கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாகவே கட்சிக்குள்ளேயே முதல்வருக்கு எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது.  அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர், எம்எல்ஏக்கள் பசனகவுடா , அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர் எடியூரப்பாவை பகிரங்கமாகவிமர்சித்து வருகின்றனர். மேலும், எடியூரப்பாவுக்கு 78 வயது ஆகிவிட்டதால் அவருக்கு பதிலாக வேறு ஒருவரை முதல்வராக அமர்த்த வேண்டும் எனக் கூறி எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெற்று மேலிடத்துக்கும் அனுப்பினர்.


உட்கட்சியில் பூசல் வலுவடைய பாஜக கர்நாடக மாநில பொறுப்பாளர் அருண் சிங் பெங்களூரு வந்தார். அவருடைய பேச்சு எல்லாம் எடியூரப்பாவுக்கு ஆதரவாக இருப்பது போலவே தோன்றியது. இருந்தாலும் அவருக்கு எதிரான குரல்கள் ஓயவில்லை. இந்தச் சூழலில் எடியூரப்பா திடீரென்று டெல்லி பயணப்பட்டார். கூடவே மகன் விஜயேந்திராவையும் அழைத்துச் சென்றார். இதனால் எடியூரப்பா பதவி விலகுவதாகத் தகவல்கள் வெளியாகின. மகன் விஜயேந்திராவுக்கு மாநில அளவில் பொறுப்பு கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், ஜூலை 26 என்றொரு கெடுவை கூறியுள்ளார் எடியூரப்பா. ஆனால், கர்நாடகாவில் பாஜகவை ஆட்சிக்குக் கொண்டுவந்தவர் எடியூரப்பாதான். அவர் இல்லாமல் கர்நாடகாவில் பாஜக ஆள முடியாது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக சு.சுவாமி தனது ட்விட்டரில், “கர்நாடகாவில் முதன்முதலில் பாஜக ஆட்சியைக் கொண்டுவந்தவர் எடியூரப்பா. ஆனால், அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க சதி நடக்கிறது. எடியூரப்பா இல்லாமல் மாநிலத்தில் பாஜகவை நடத்த முடியாது. பாஜகவுக்கு மீண்டும் எடியூரப்பா வந்தபின்தான் வெற்றி பெற முடிந்தது. எதற்காக மறுபடியும் அதே தவறைச் செய்கிறீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.


அவருடைய இந்த ட்வீட் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பாவுக்கு சுப்பிரமணியன் சுவாமி எப்போதுமே ஆதரவு தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


எடியூரப்பாவும் லிங்காயத் சமூக மடாதிபதிகளிடம் ஆதரவு திரட்டியிருந்தார். மடாதிபதிகளும் எடியூரப்பாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். எடியூரப்பாவுடன் சந்திப்புக்குப் பின்னர் அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், "பாஜக தலைமை எந்த முடிவை எடுத்தாலும் அதனை எடியூரப்பா தலைவணங்கு ஏற்பார். ஆனால் கர்நாடகாவில் பாஜக தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருக்க எடியூரப்பாவும் அவரது ஆதரவாளர்களுமே காரணம். முதல்வர் பதவியில் இதற்கு முன்னர் கூட எடியூரப்பா தனது பதவிக்காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. அந்த வலி அவருக்குள் இருக்கிறது என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டுள்ளோம். எடியூரப்பா மாற்றப்பட்டால் இந்த மாநிலத்தில் பாஜக அழிந்துவிடும். இது எங்கள் கருத்து மட்டுமல்ல. மாநில மக்களின் கருத்தும் இதுவே" என்று கூறியுள்ளனர். இத்தகைய பரபரப்பான சூழலில் வரும் 26ஆம் தேதியை கர்நாடக பாஜக பரபரப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.