அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பது தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில் கூட, தெற்கு மும்பையில் உள்ள சர் எச்.என். ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போன் செய்து, அங்கு வெடிகுண்டு வெடிக்க வைக்க போவதாக மிரட்டினார்.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்திலும், இதேபோன்று ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு போன் செய்த நபர், தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர், அது நகைக்கடைக்காரர் என தெரிய வந்து, அவர் கைது செய்யப்படடார்.
ஏழு உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்:
இதன் தொடர்ச்சியாக, தற்போது நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஒன்று அல்ல, இரண்டு அல்ல, ஏழு உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியின் தகவல் தொடர்பு அதிகாரி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய சிஇஎன் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத சந்தேக நபர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
பகீர் கிளப்பும் துபாய் கும்பல்:
கடந்த ஜூலை 14ஆம் தேதி, நீதிபதி கே. முரளிதர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 12ஆம் தேதி இரவு 7 மணியளவில் சர்வதேச எண்ணிலிருந்து வாட்ஸ்அப் மெசஞ்சரில் அவருக்கு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த மொபைல் எண், அவருக்கு உயர் நீதிமன்றத்தால் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது.
ஐந்து மொபைல் எண்களில் இருந்து இந்து, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளில் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. நீதிபதி முரளிதர், நீதிபதி முகமது நவாஸ், நீதிபதி எச்.டி.நரேந்திர பிரசாத், நீதிபதி அசோக் ஜி நிஜகன்னவர் (ஓய்வு), நீதிபதி ஹெச்.பி.சந்தேஷ், நீதிபதி கே.நடராஜன் மற்றும் நீதிபதி பி.வீரப்பா (ஓய்வு ) உள்ளிட்ட ஏழு பேருக்கு துபாய் கும்பல் ஒன்று கொலை மிரட்டல் விடுத்ததாக காவல்துறையினர் தகவல் கூறுகின்றனர்.
இதுகுறித்து கடந்த ஜூலை 14ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், பாகிஸ்தானில் உள்ள வங்கிக் கணக்கில் 50 லட்சம் ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 506, 507 மற்றும் 504 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 75 மற்றும் 66(F) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் அதை முதன்மை கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.