21ஆம் நூற்றாண்டு தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராக கருதப்படுபவர் கிறிஸ்டோபர் நோலன். இவரின் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள படம் ஓப்பன்ஹைமர். அணு ஆயுதத்தின் தந்தை என அழைக்கப்படும் அமெரிக்க விஞ்ஞானி ஓப்பன்ஹைமரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு, எடுக்கப்பட்ட இந்த படம் கடந்த வாரம் வெளியாகியிருந்தது.


பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய ஓப்பன்ஹைமர் திரைப்படம்:


திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அதில் பகவத் கீதை வசனம் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியான நிலையில், இந்தியாவில் அதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், திரைப்படத்தில் படுக்கை அறை காட்சியில் பகவத் கீதை வசனம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.


படுக்கை அறை காட்சியில் பகவத் கீதை வசனத்தை வைத்து இந்து மதத்தின் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக சிலர் குற்றச்சாட்டு சுமத்தி வருகின்றனர். இந்த திரைப்படத்திற்கு, மத்திய திரைப்பட தணிக்கை குழு, U/A சான்றிதழ் வழங்கியிருந்தது.


இந்து மத உணர்வுகளை புண்படுத்தி இருப்பதாக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தணிக்கை குழு மீது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தணிக்கை குழுவின் கட்டுப்பாடுகளை மீறி எந்த வித மாற்றங்களும் இன்றி திரைப்படம் எப்படி வெளியானது என அதிகாரிகளிடம் அனுராக் தாக்கூர் கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.


படத்தில் இடம்பெற்ற படுக்கை அறை காட்சியால் சர்ச்சை:


சர்ச்சைக்குரிய அந்த காட்சி, திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும் என அனுராக் தாக்கூர் வலியுறுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படத்தின் தயாரிப்பாளரான யுனிவர்சல் பிக்சர்ஸ் இந்தியா, சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.


திரைப்படத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ள சேவ் கல்ச்சர் சேவ் இந்தியா பவுண்டேஷன் அமைப்பு, "பாலியல் உறவு கொள்ளும்போது, ஆணின் மீது ஏறி உட்கார்ந்திருக்கையில், பெண் ஒருவர் அவரை உரக்க பகவத் கீதையை சொல்ல வைக்கிறார். இப்படி காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம், இது தொடர்பாக விசாரிக்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்" என அறிக்கையில் தெரிவித்துள்ளது.


புலிட்சர் விருது பெற்ற American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer எனும் புத்தகத்தைத் தழுவி இப்படத்தை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தில் ஓப்பன்ஹைமர் குறித்து கூறப்பட்டிருக்கும் தகவல்களால் ஈர்க்கப்பட்டு இந்தப் படத்தை நோலன் இயக்கியுள்ளார்.