தனது மகளின் முதல் மாதவிடாய் தருணத்தை உறவுகள் மற்றும் நண்பர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடிய தந்தைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


மாதவிடாய் என்றாலே தீட்டு என்று கூறி முகத்தை சுளித்து கொள்ளும் கலாச்சாரம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. மாதவிடாய் ஏற்பட்டால் பெண்கள் வீட்டு அடுப்பறைக்குள் செல்ல கூடாது, இறை வழிபாட்டு தளங்களுக்கு செல்ல கூடாது, ஒதுங்கி இருக்க வேண்டும் உள்ளிட்ட அவசியமற்ற கட்டுப்பாடுகளை ஒருசிலர் இன்றும் பின்பற்றி வருகின்றனர். அண்மையில் இணையத்தில் வைரலான வீடியோ ஒன்றில், கிராமம் ஒன்றில் மாதவிடாய் ஏற்படும் பெண்களை தனியாக ஒதுக்கி வைத்து ஒரு வீட்டில் தங்க வைக்கும் சம்பிரதாயத்தை கடைப்பிடித்து வருவதாக கூறப்பட்டது. 


பெண்களே மாதவிடாய் குறித்து பேச அசிங்கப்படுவதும், அது அருவருப்பான ஒரு நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது. வயதுக்கு வந்தவுடன் மாதவிடாயை விழாவாக கொண்டாடும் சில குடும்பங்கள் அடுத்தடுத்த மாதங்களில் அதை தீட்டாக பார்க்கின்றன. மாதவிடாய் மீதான இப்படிப்பட்ட சமூக பார்வை மாற வேண்டும் என்பதற்காக உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இசை ஆசிரியர் ஒருவர், தனது மகளின் முதல் மாடவிடாய் நிகழ்வை விழாவாக கொண்டாடியுள்ளார். 


உத்தரகாண்ட் மாநிலம் உதாம் சிங் நகரை சேர்ந்த ஜிதேந்திர பத் என்பவர் தனது பேஸ்புக்கில், தனது மகளின் முதல் மாதவிடாயை கொண்டாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அவரின் 13 வயதான ரோகிணி பருவம் அடைந்துள்ளார். தன் மகளுக்கு முதல் மாதவிடாய் ஏற்பட்டதற்கு மகிழ்ச்சி அடைந்த ஜித்தேந்திர பத், நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடினார். ரோகிணியின் நண்பர்களும் விழாவுக்கு அழைக்கப்பட்டனர்.


சிகப்பு நிற வெல்வெட் கேக் மீது ஹேப்பி பீரியட்ஸ் ரோகிணி என எழுதப்பட்டு அந்த கேக்கை வெட்டி பெற்றோர் இருவரும் தங்கள் மகளுக்கு ஊட்டினர். இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்த நண்பர்கள், ரோகிணிக்கு நாப்கின்களை பரிசாக வழங்கினர்.


இது குறித்து பேசிய ஜித்தேந்திர பத், ”மாதவிடாய் என்பது பெண்களுக்கு இயற்கையாக நடைபெறும் ஒரு சுழற்சி, அதை மறைக்கவும் தீட்டு என தள்ளி வைக்கவும் ஒன்றும் இல்லை. இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே எனது மகளின் முதல் மாதவிடாய் நிகழ்வை விழாவாக கொண்டாடினேன்” என்றார். 



ஜிதேந்திர பத்தின் இந்த செயலுக்கு இணையத்தில் பலரும் வாழ்த்து கூறி வருவதுடன், தாங்களும் தங்கள் வீட்டு பெண்களை ஒதுக்கி வைக்கமாட்டோம் என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.