பிராமணராக இருந்தாலும் சாவர்க்கர் மாட்டிறைச்சியை உண்டதாகவும் அவர் ஒரு அடிப்படைவாதி என்றும் காங்கிரஸ் மூத்த தலைவரும் கர்நாடக அமைச்சருமான தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.


இந்துத்துவ கொள்கைகளை வடிவமைத்தவர்களில் ஒருவரான சாவர்க்கர் மீது காங்கிரஸ் கடும் விமர்சனங்களை மேற்கொண்டு வருகிறது. சுதந்திர போராட்ட காலத்தில், ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த விவகாரத்தில் ராகுல் காந்தி வெளிப்படையான விமர்சனங்களை முன்வைத்தார்.


காங்கிரஸ் தலைவர் கூறியது என்ன?


இந்த நிலையில், சாவர்க்கர் குறித்து கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்த கருத்து அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. அவர் கூறியது பின்வருமாறு, "சித்பவன் பிராமணராக இருந்த போதிலும் சாவர்க்கர் இறைச்சி சாப்பிட்டார். அசைவம் உண்பவர். பசுவதைக்கு எதிரானவர் அல்ல.


அவர் மாட்டிறைச்சியை உண்பதாக சிலர் கூறுகின்றனர். பிராமணரான அவர் இறைச்சி உண்பதை வெளிப்படையாக சொன்னார். பாகிஸ்தானின் தந்தையான முகமது அலி ஜின்னா ஒரு அடிப்படைவாதி அல்ல. ஆனால் சாவர்க்கர் ஒரு அடிப்படைவாதி" என்றார்.


கர்நாடக அமைச்சரின் கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கூறுகையில், "இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு ஆங்கிலேயர்களால் அந்தமான்-நிகோபார் தீவுகளில் உள்ள செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு காங்கிரஸ் தலைவரை அக்கட்சியால் சொல்ல முடியுமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.


பொங்கி எழுந்த பாஜக, சிவசேனா:


இதற்கு கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ள ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் சஞ்சய் நிருபம், "சாவர்க்கரை காங்கிரஸ் தொடர்ந்து அவமானப்படுத்தினால், அவர்கள் தேர்தலில் அதற்கான தண்டைனை பெறுவார்கள். வீர சாவர்க்கர் குறித்து கர்நாடக சுகாதார அமைச்சர் கூறிய கருத்து முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இது அவரை அவமதிக்கும் செயலாகும்.


சாவர்க்கர் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார் என்ற கூற்று பொய்யானது என்றும் காங்கிரஸ் அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் கூறியுள்ளார்.  குறிப்பாக, தேர்தலுக்கு முன்பாக சாவர்க்கரை அவதூறு செய்வது காங்கிரஸின் உத்தியாக உள்ளது.


முன்பு, ராகுல் காந்தி அதைச் செய்தார். இப்போது அவரது தலைவர்கள் செய்கிறார்கள். இந்து சமுதாயத்தை ஜாதிகளுக்கு இடையில் பிளவுபடுத்தி தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் விரும்புகிறது. இது ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி போன்றது" என்றார்.