காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு, தங்களது மாநிலத்தில்  தொழில் தொடங்க தொழிலதிபர் எலன் மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்துள்ளது.


கர்நாடகாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் எம்.பி பாட்டீல், தனது ட்விட்டர் பதிவில், டெஸ்லாவை இந்தியாவிற்குள் விரிவாக்குவதற்கு கர்நாடகா தான் சிறந்த இடம் என்று குறிப்பிட்டுள்ளார்.


"டெஸ்லா நிறுவனம் அதன் பெரும் ஆற்றல் மற்றும் திறன்களைக் கொண்ட இந்தியாவில், ஒரு ஆலையை அமைப்பதைக் கருத்தில் கொண்டால், கர்நாடகாதான் சிறந்த இடம் என்று சொல்ல வேண்டும்," என்று அவர் கூறினார்.


மேலும் கர்நாடகா "ஒரு முற்போக்கான மாநிலமாகவும், புதுமை மற்றும் தொழில்நுட்பத்தின் செழிப்பான மையமாகவும், டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் உட்பட எலன் மஸ்க்கின் பிற முயற்சிகளுக்குத் தேவையான வசதிகளை ஆதரிக்கவும் வழங்கவும் கர்நாடகம் தயாராக உள்ளது" என்று பாட்டீல் தனது ட்விட்டர் பதிவில் எலன் மஸ்கை டேக் செய்து இவ்வாறு பதிவிட்டுள்ளார். 


கர்நாடகா, அடுத்த பத்தாண்டுககளில் மாநிலத்தை முன்னெடுத்துச் செல்ல, தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி ஆகியவற்றின் மையமாக இருப்பதில் கவனம் செலுத்துகிறது என்று பாட்டீல் கூறினார்.


இதற்கிடையில், அமெரிக்க பயணத்தின் போது, ​​பிரதமர் நரேந்திர மோடி, டெஸ்லா மற்றும் ட்விட்டர் தலைவர் எலோன் மஸ்க்கை  சந்தித்து, இந்தியாவில் மின்சார இயக்கம் மற்றும் வேகமாக விரிவடைந்து வரும் வர்த்தக விண்வெளித் துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை ஆராயுமாறு அழைப்பு விடுத்தார்.






பிரதமர் மோடியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலன் மஸ்க், இந்தியாவின் எதிர்காலம் குறித்து நம்பமுடியாத அளவிற்கு உற்சாகமாக இருப்பதாகவும், உலகின் எந்த பெரிய நாட்டை விடவும் இந்தியா வலுவான நாடு என்றும் கூறினார்.


"அடுத்த ஆண்டு மீண்டும் இந்தியாவிற்கு வருவதற்கு நான் தற்காலிகமாக திட்டமிட்டுள்ளேன். நான் அதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்" என்று  மஸ்க் கூறினார்.


நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த எலன் மஸ்க், தனது கார் நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் " மனித வளத்தினைக் கொண்டு  கூடிய விரைவில்" வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். "பிரதமர் மோடியின் ஆதரவிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” எனவும் கூறினார். 


டெஸ்லா எப்போது இந்தியாவில் தொடங்கப்படும் என்ற கேள்விக்கு,  மஸ்க், "நான் ஒரு அறிவிப்பின் மூலம்  எதையும் கூற விரும்பவில்லை, ஆனால் எதிர்காலத்தில் இந்தியாவிற்கு குறிப்பிடத்தக்க முதலீடு இருக்கும்" என்று கூறினார்.


இந்தியாவில் டெஸ்லாவின் முதலீடுகள் குறித்து அவரது மனதை மாற்றியது என்ன என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, "நான் ஒருபோதும் என் எண்ணத்தை மாற்றவில்லை" என்று புன்னகையுடன் கூறினார்.


டெஸ்லா தனது புதிய தொழிற்சாலை இந்தியாவில் எங்கு தொடங்கப்படும் என 2023 இறுதிக்குள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும், எலன் மஸ்க் தனது ஸ்டார்லிங்க் சேவைகளை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் ஆர்வம் காட்டினார். Starlink என்பது செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவை வழங்குநராகும், இது  மஸ்க்கின்  நிறுவனமான SpaceX ஆல் இயக்கப்படுகிறது.