அடுத்தாண்டு மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜகவை வீழ்த்துவதற்கான வியூகம் குறித்து ஆலோசனை செய்யும் வகையில் பிகார் மாநிலம் பாட்னாவில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்து வருகிறது. இதில், 16 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம், மாலை 3:30 மணி வரை நடைபெற்றது.
16 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட பாட்னா கூட்டம்:
இதை தொடர்ந்து நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். முன்னதாக, டெல்லியில் அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு எதிரான தங்களின் நிலைபாட்டுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் பாட்னா கூட்டத்தை புறக்கணிப்போம் என ஆம் ஆத்மி தெரிவித்திருந்தது.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கார்கே, "நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முன்னதாகவே இதுபோன்ற பிரச்னைகள் குறித்து முடிவெடுக்கப்படும்" என்றார்.
தொடர்ந்து பேசிய கார்கே, "அதை எதிர்ப்பதோ, முன்மொழிவதோ வெளியில் நடக்காது. நாடாளுமன்றத்தில்தான் நடக்கும். நாடாளுமன்ற கூட்டம் தொடங்கும் முன், அனைத்துக் கட்சிகளும் தாங்கள் இணைந்து செயல்பட வேண்டிய பிரச்னைகளை முடிவு செய்கின்றன. அது அவர்களுக்குத் தெரியும். அவர்களின் தலைவர்கள் கூட நமது அனைத்துக் கட்சிக் கூட்டங்களுக்கு வருகிறார்கள். வெளியில் ஏன் இவ்வளவு விளம்பரம் என்று தெரியவில்லை" என்றார்.
இந்த விவகாரத்தில், பாஜகவுடன் காங்கிரஸ் டீலிங் வைத்திருப்பதாகவும் அதனால்தான் காங்கிரஸ் முடிவு எடுக்கவில்லை என்றும் ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் பிரியங்கா கக்கர் கூறுகையில், "காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே ஒருமித்த கருத்து உள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது. அதனால்தான் காங்கிரஸ் இந்த அவசரச் சட்டத்தை எதிர்க்கவில்லை" என்றார்.
இந்த கூட்டத்தில், கே. சந்திரசேகரராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ், ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்டிரிய லோக் தளம் ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தில் கலந்து கொள்ள மாயாவதிக்கு அழைப்பு விடுக்கவில்லை என்ற போதிலும், தான் இந்த கூட்டத்தில் பங்கேற்கமாட்டேன் என மாயாவதி கூறியிருந்தார்.
பாஜகவை கதறவிடும் வியூகம்:
காங்கிரஸ், பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியில் இடம்பெற மாட்டோம் எனக் கூறி கூட்டத்தை புறக்கணித்துள்ளது பாரத் ராஷ்டிர சமிதி. குடும்ப நிகழ்ச்சி காரணமாக கூட்டத்தில் கவந்து கொள்ளவில்லை என ஜெயந்த் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் குறைந்தபட்ச செயல் திட்டம் இறுதி செய்யப்பட வாய்ப்பில்லை என்றாலும், சமூக நீதி தொடர்பான பிரச்னைகள், விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்தியது, மணிப்பூரில் நடந்த வன்முறை, மல்யுத்த வீரர்களின் போராட்டம், டெல்லி அவசர சட்டம் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள், ஒற்றை தலைமையை முன்னிறுத்துவது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் ஒற்றை வேட்பாளரை நிறுத்த வேண்டும் என நிதிஷ் குமார் கூறியிருந்தார். அதுகுறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.