கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று சட்டசபையில் தனது கடைசி உரையை ஆற்றினார். அப்போது பேசிய எடியூரப்பா, “தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். ஆனால் பாஜக வெற்றி பெற எனது கடைசி மூச்சு வரை பாடுபடுவேன். பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதே எனது ஒரே நோக்கம், அது நடக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.” என்று தெரிவித்தார். 


முன்னதாக கடந்த பிப்ரவரி 22 ம் தேதி பேசிய எடியூரப்பா, "நான் இந்த முறை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று ஏற்கனவே அறிவித்துள்ளேன், ஆனால் எனது கடைசி மூச்சு வரை கட்சியின் வெற்றிக்காக தீவிரமாக பாடுபடுவேன்" என்று கூறினார்.


நான்கு முறை முதலமைச்சர்:


எடியூரப்பா தனது பிரியாவிடை உரையில், பாஜக என்னை ஓரங்கட்டிவிட்டதாக எதிர்க்கட்சிகள் பல சமயங்களில் கருத்து தெரிவித்ததாகவும், ஆனால் நான் நான்கு முறை முதல்வராக பதவியேற்றுள்ளேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்றார். இவ்வளவு வாய்ப்புகள் வேறு எந்த தலைவருக்கும் கொடுக்கப்படவில்லை. பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என்றார்.


பிரதமர் உரை:


எடியூரப்பாவின் பிரியாவிடை உரையில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். பிரதமர் மோடி கூறுகையில், "ஒரு பாஜக தொண்டர் என்ற முறையில் இந்த பேச்சு எனக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது. இது எங்கள் கட்சியின் நெறிமுறைகளை பிரதிபலிக்கிறது. இது மற்ற கட்சியினருக்கும் உத்வேகம் அளிக்கும்" என்று கூறினார்.


எடியூரப்பா 1988-ல் கர்நாடக பாஜக தலைவராக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது. அவர் 1983 இல் கர்நாடக சட்டமன்றத்தின் கீழ் சபைக்கு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார், அதன் பிறகு ஷிகாரிபுரா தொகுதியில் ஆறு முறை வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.