ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா உச்சி மாநாட்டில் முதல் ஆளாக பிரிட்டன் முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் உரையாற்றினார்.
ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா உச்சி மாநாட்டின் இரண்டாம் பதிப்பு மும்பையில் இன்றும், நாளையும் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வை பிரிட்டன் முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ், ஏபிபி நெட்வொர்க்கின் தலைமை செயல் அதிகாரி அவினாஷ் பாண்டே ஆகியோர் மாநாட்டை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா உச்சி மாநாட்டில் அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், தொழில் அதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 60 பேர், கிட்டத்தட்ட 40 அமர்வுகளில் கலந்து கொண்டு புதிய இந்தியா குறித்த தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா உச்சி மாநாட்டில் முதல் ஆளாக பிரிட்டன் முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நேட்டோவில் இணைய உக்ரைன் அனுமதி கேட்டிருந்தபோது அதை அனுமதித்திருக்க வேண்டும். மேற்குலகில் நாம் மனநிறைவு அடைந்தோம். சுதந்திரத்தை பாராட்ட தவறவிட்டோம். நாம் முன்னரே செயல்பட்டிருக்க வேண்டும். உக்ரைன் அவர்கள் கேட்டபோது நேட்டோவுடன் சேர அனுமதித்திருக்க வேண்டும். எண்ணெய், எரிவாயு மற்றும் தன்னலமாக செயல்பட்டு வரும் ரஷிய ஆட்சியாளர்கள் ஐரோப்பாவிற்கு தரும் நிதி ஆகியவற்றிற்காக நாம் ரஷ்யாவைச் சார்ந்திருக்க கூடாது என்பதை உறுதி செய்திருக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து இந்தியாவை பற்றி பேசிய லிஸ் டிரஸ், “இந்தியாவில், நமது எதிர்காலத்திற்கான மிகப்பெரிய நம்பிக்கையை நாம் காண்கிறோம். வேகமாக வளர்ந்து வரும் சுதந்திர ஜனநாயக நாடாக இந்தியா உள்ளது. பொருளாதார சுதந்திரம் கிடைத்தால், சீனா சுதந்திரம் அடையும் என்ற அறிவற்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. ஆனால், சுதந்திரமான வாழ்க்கை முறையை கெடுக்க சீனாவின் பொருளாதாரம் பயன்படுகிறது” என்று தெரிவித்து தனது உரையை முடித்து கொண்டார்.
யார் இந்த லிஸ் டிரஸ்..?
லிஸ் டிரஸ் ஐக்கிய இராஜ்ஜியத்தின் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர். 45 நாட்கள் மட்டுமே பதவி வகித்த் பிரிட்டனின் மிகக் குறுகிய காலம் பிரதமராக இருந்தவர். ரிஷி சுனக்கிற்கு எதிரான தெளிவான வெற்றியை உறுதி செய்த பின்னர், போரிஸ் ஜான்சனுக்குப் பிறகு டிரஸ் பிரதமராக பதவியேற்றார். ராணி இரண்டாம் எலிசபெத் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு டிரஸை பிரதமராக நியமித்தார். அக்டோபர் 2022 இல் ட்ரஸ் இங்கிலாந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். பிரதமர் பதவியில் இருந்து விலகி சில மாதங்களுக்குப் பிறகு, தென் மேற்கு நார்போக் கன்சர்வேடிவ் அசோசியேஷன் அடுத்த பொதுத் தேர்தலுக்கான வேட்பாளராக டிரஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.