சத்தீஸ்கரின் பலோடா பஜார் மாவட்டத்தில் டிரக் மீது வேன் மோதியதில் பதினொரு பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


இந்த விபத்து நேற்று இரவு நடைபெற்றது. பட்டபரா துணை-பிரிவு போலீஸ் அதிகாரி (SDOP) சித்தார்த் பாகேல் கூறுகையில், "வேன் டிரக் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த சம்பவம் பட்டபரா (கிராமப்புற) காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கமாரியா கிராமத்தில் நடந்தது. வேன் ஒரு விழாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, கமாரியா கிராமத்தில் ​​அர்ஜுனி என்ற இடத்தில் டிரக் மோதியதில் 11 பேர் இறந்தனர். மேலும் எட்டு பேர் காயமடைந்தனர்” எனக் கூறினார்.  


காயமடைந்தவர்களை அப்பகுதியினர் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஒரு சிலரை தீவிர சிகிச்சைகாக ராய்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  


சத்தீஸ்கர் கான்கேர் பகுதியில் சமீபத்தில் இதே போன்ற சம்பவம் நடைபெற்றது. பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற ஆட்டோ டிரக் மீது மோதியதில் 7 குழந்தைகள் உயிரிழந்தனர். ஆட்டோ ஓட்டுனர் மற்றும் ஒரு குழந்தை மட்டும் பலத்த காயத்துடன் தப்பித்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர்.  


இந்த விபத்தை பற்றி சுகாதார அதிகாரி அவினாஷ் கேர் கூறுகையில், “ 8 குழந்தைகளை எற்றி ஆட்டோ சென்றுள்ளது. எதிரில் வரும் டிரக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். உயிருக்கு போராடி வரும் ஒரு குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த குழந்தைக்கு மேல் சிகிச்சை அளிக்க ராய்ப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆட்டோ ஓட்டுனரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக”, கூறினார்.