அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த கர்நாடக தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று முடிந்துள்ளது. காலை முதலே வாக்குபதிவு விறுவிறுப்பாக நடந்து வந்தது. மாலை 5 மணி நிலவரப்படி, 65.69 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கிராமப்புறங்களில், மக்கள் எப்போதும் போல ஆர்வத்துடன் வாக்களித்த போதிலும் நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. குறிப்பாக, மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் குறைவான அளவிலேயே வாக்குகள் பதிவாகி இருக்கிறது. யஷ்வந்த்பூர் தொகுதியில் அதிகபட்ச வாக்கு சதவிகிதம் பதிவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஏபிபி - சி வோட்டர்:


இந்நிலையில், பல்வேறு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. புகழ்பெற்ற ஏபிபி செய்தி நிறுவனம் சி வோட்டருடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, காங்கிரஸ் 100 முதல் 112 இடங்களை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பாஜக, 83 முதல் 95 இடங்கள் வரை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பெரிய கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம், 21 முதல் 29 தொகுதிகள் வரை பெற்றலாம் என கூறப்பட்டுள்ளது.


நியூஸ் நேஷன் - சிஜிஎஸ்:


நியூஸ் நேஷன் - சிஜிஎஸ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, பாஜக 114 இடங்கள் வரை வெற்றிபெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, பிரதான எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் 86 தொகுதிகள் வரை கைப்பற்றலாம் என கூறப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம், 21 தொகுதிகள் வரை வெற்றி பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


ஜன் கி பாத்:


பாஜக, 94 முதல் 117 இடங்கள் வரை பெறும் என்றும் காங்கிரஸ், 91 முதல் 106 இடங்கள் வரை பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 14 முதல் 24 தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.


மேட்ரிக்ஸ்:


மேட்ரிக்ஸ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, காங்கிரஸ் 103 முதல் 118 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டுள்ளது. தற்போது ஆளுங்கட்சியாக உள்ள பாஜக, 79 முதல் 94 தொகுதிகள் வரை வெற்றபெறலாம் என்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 25 முதல் 33 தொகுதிகள் வரையில் கைப்பற்றலாம் என கணிக்கப்பட்டப்பட்டுள்ளது.


PMARQ:


PMARQ நடத்திய கருத்துகணிப்பு முடிவுகளின்படி, காங்கிரஸ், 94-108 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் பாஜக, 83-95 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம், 21 - 29 தொகுதிகளில் வெற்ற பெற வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


POLSTRAT:


POLSTRAT நடத்திய கருத்துகணிப்பு முடிவுகளின்படி, காங்கிரஸ், 88 முதல் 98 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் பாஜக, 99 முதல் 109 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம், 21 - 26 தொகுதிகளில் வெற்ற பெற வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


டைம்ஸ் நவ்-ஈடிஜி:


113 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என டைம்ஸ் நவ்-ஈடிஜி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக, 85 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 23 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.