தேனி எம்.பி ரவீந்திரநாத் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் அவரை அதிமுக என அங்கீகரிக்க கூடாது என அதிமுக சார்பில் மக்களவை சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது


தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத்துக்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மக்களவை சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார். அதில் ரவீந்திரநாத் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் என்பதால், அவரை அதிமுக என அங்கீகரிக்க கூடது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், தேனி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு 76,319 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.


ரவீந்திரநாத் மட்டுமே அதிமுகவின் ஒரே மக்களவை எம்.பி ஆவார். அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக சென்ற ஆண்டே மக்களவை சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். இருந்தபோதிலும் ரவீந்திரநாத் அதிமுக எம்.பியாகவே தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், தேர்தல் வழக்கு தீர்ப்பால் ரவீந்திரநாத்துக்கு சிக்கல் வருமோ என்ற அச்சத்தில்  ஓபிஎஸ் அணி இருந்தது. இந்நிலையில் சி.வி. சண்முகம், ரவீந்திரநாத்தை அதிமுக என அங்கீகரிக்க கூடாது என மக்களவை சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார்.  


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக வி.கே.சசிகலா வசம் சென்றது. அப்போது ஓபிஎஸ் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். பின்னர் சசிகலா தலைமையில் ஆட்சி அமைப்பதற்காக ஆளுநரிடம் பட்டியல் கொடுக்கப்பட்டது. அதற்குள் சசிகலாவிற்கு சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை கிடைத்ததால் அவர் சிறை சென்றுவிட்டார்.


அவர் கை காட்டிய படி எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். மற்றொரு புறம் ஓபிஎஸ் தர்ம யுத்தத்தில் ஈடுபட்டிருந்த நேரத்தில் ஏராளமான அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்தனர். அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸ் அணி- இபிஎஸ் அணி என இரண்டு அணிகளாக பிரிந்திருந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு பின் அதிமுக ஒன்று பட்டது. ஓ.பன்னீர் செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், இபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இயங்கினர். ஆனால் அதிமுக ஆட்சி முடிவடைந்து திமுக ஆட்சி அமைந்த நிலையில் கட்சிக்கு யார் தலைமை வகிப்பது என்ற போட்டி எழுந்தது.


இபிஎஸ் பக்கம் அதிக ஆதரவாளர்கள் திரண்ட நிலையில் இபிஎஸ் -க்கு ஆதரவாக  அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடியது. ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதுடன், இபிஎஸ் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.