கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு தேர்தலில் நடைபெற்று வரும் நிலையில் விஜயபுரா மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடைத்து நொறுக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 224 தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
இதனிடையே கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள பசவனா பாகேவாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மசாபினல் கிராமத்தில் மக்களின் தவறான புரிதலால்வாக்குப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு வாக்குப்பதிவுக்கு வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தால் அதனை விஜயபுரா மாவட்டத்துக்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றார்.
ஆனால் கிராம மக்கள் இடையே வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்படுவது குறித்து தவறான தகவல்கள் பரவியதால் அவர்கள் அதிகாரிகள் சென்ற காரை சூழ்ந்து கேள்வி மேல் கேள்வி எழுப்பினர். இதற்கு சொல்லப்பட்ட பதில் திருப்திகரமாக இல்லாததால் ஆத்திரத்தில் கிராம மக்கள் காரை சேதப்படுத்தியதோடு, வாக்குப்பதிவு இயந்திரங்களை தரையில் போட்டு உடைத்தனர்.
இச்சம்பவத்தால் மசாபினல் கிராமத்தில் குழப்பமான சூழல் ஏற்பட்டது.தொடர்ந்து விஜயபுரா துணை கமிஷனர் தலைமையிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு வாக்குப்பதிவானது நடைபெற்றது.
கர்நாடகா தேர்தல் நிலவரம்
கர்நாடக சட்டசபையானது 224 இடங்களைக் கொண்டுள்ளது. ஒரு கட்சி அல்லது கூட்டணி ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 112 இடங்களைப் பெற வேண்டும். தற்போது அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தென்னிந்தியாவில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகா என்பதால், இந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றது. மேலும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக நடப்பாண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தல்கள் முடிவுகள் அமையும் என்பதால் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் மிகத் தீவிரமாக பிரச்சாரம் செய்தன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே கர்நாடகாவில் தேர்தல் திருவிழா களைக்கட்டியது. பிரதமர் மோடி தொடங்கி பாஜகவின் முக்கிய நிர்வாகிகளும், காங்கிரஸில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் பிரச்சாரம் செய்தனர். இன்று பதிவாகும் வாக்குகள் மே 13 ஆம் தேதி எண்ணப்படுகிறது. கருத்துக்கணிப்புகள் கர்நாடகாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Karnataka Elections 2023 LIVE: வாக்குப்பதிவு இயந்திரங்களை போட்டு உடைத்த கிராமவாசிகள்...கர்நாடக தேர்தலில் பரபரப்பு..!