கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம் கட்சியின் தேசிய தலைவருக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்:
காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவராக யார் தேர்வு செய்யப்படுகிறாரோ, அவருக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படும். சுஷில்குமார் ஷிண்டே, தீபக் பவாரியா மற்றும் பன்வர் ஜிதேந்திரா சிங் ஆகியோர் கர்நாடகாவின் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு, அவர்களது தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் மாநில தலைவர் சிவக்குமார் மற்றும் மூத்த தலைவர் சித்தராமையா ஆகியோர் இடையே, முதலமைச்சர் பதவிக்கு கடும்போட்டி நிலவி வருகிறது.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆளும் கட்சியான பாஜக 66 இடங்களை கைப்பற்றி ஆட்சியை இழந்துள்ளது. ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்காற்றும் என கருதப்பட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் வெறும் 19 இடங்களை கைப்பற்ற, சுயேச்சை உள்ளிட்ட பிறர் 4 இடங்களை கைப்பற்றினார்.
முதலமைச்சர் பதவி தொடர்பாக சித்தராமையா மற்றும் சிவக்குமார் இடையே கருத்து மோதல் நிலவுவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக தும்கூரில் செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார் “ மூத்த தலைவர் சித்தராமையாவுடன் தனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. கட்சிக்காக நான் பலமுறை தியாகம் செய்துள்ளேன். தியாகம் செய்து, உதவி செய்து, சித்தராமையாவிற்கு உறுதுணையாக இருந்துள்ளேன். கடந்த ஆட்சியின் போது எனக்கு அமைச்சர் பதவி கொடுக்காதபோதும் அமைதியாக தான் இருந்தேன். " இவ்வாறு அவர் கூறினார்.
பிரியங்க் கார்கே முதலமைச்சரா?
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகர்ஜுனா கார்கேவை, அவரது இல்லத்தில் வைத்து மூத்த தலைவர் சித்தராமையா சந்தித்தார். இதுதொடர்பாக பேசிய மல்லிகர்ஜுனா கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே ”கார்கே மற்றும் சித்தராமையா இடையேயான சந்திப்பு மரியாதை நிமித்தமானது மட்டுமே. இது அரசியல் சந்திப்பு இல்லை. முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக தான் எம்.எல்.ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. நான் தான் முதலமைச்சர் என வீட்டின் வெளிப்புறத்தில் போஸ்டர்களை ஒட்டுவதன் மூலம் மட்டும் நான் முதலமைச்சர் ஆகி விட முடியாது” எனவும் கூறினார்.
வரும் வியாழக்கிழமை, முதலமைச்சர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதில், நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.