கர்நாடக காவல்துறை தலைவரான பிரவீன் சூட், மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, சிபிஐ இயக்குநராக உள்ள மகாராஷ்டிரா கேடரைச் சேர்ந்த 1985ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சுபோத் குமார் ஜெய்ஸ்வாலின் பதவிக்காலம், மே 25ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளதால், புதிய இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.


கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட பெயர்:


பிரதமர் நரேந்திர மோடி, இந்திய தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் (காங்கிரஸ்) அதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட குழு, நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இவரின் பெயரை இறுதி செய்தது.


சிபிஐ இயக்குநர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட அதிகாரிகள் பட்டியலில் முதலின் அவரின் பெயர் இடம்பெறவில்லை என்றும் பின்னர், கடைசி நேரத்தில் பட்டியலில் அவரின் பெயர் சேர்க்கப்பட்டதால் அதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.


தேர்வு செய்யும் குழு உறுப்பினர்களிடம், பரிந்துரைக்கட்டப்பட்ட அதிகாரிகளின் பெயர் பட்டியல் முன்னதாகவே பகிரப்படுவது வழக்கம். சிபிஐ இயக்குநர் பதவிக்கான பரிந்துரை பட்டியலில் ஐபிஎஸ் அதிகாரியும் மத்தியப் பிரதேசத்தின் டிஜிபியுமான சுதிர் சக்சேனாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. ஆனால், இறுதியில், பிரவீன் சூட் நியமிக்கப்பட்டுள்ளார். 


புதிய சிபிஐ இயக்குநர் நியமனம்:


கடந்த 1986ஆம் ஆண்டு பேட்ச், கர்நாடக கேடரின் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மாநில டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இவர் ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர். ஐஐடி-டெல்லியின் முன்னாள் மாணவர் ஆவார். இவர், வரும் 2024இல் ஓய்வு பெற உள்ளார். ஆனால், இப்போது இரண்டு வருட பதவிக்காலத்தைப் பெற உள்ளதால், குறைந்தபட்சம் மே 2025 வரை பதவியில் இருப்பார்.


கடும் குற்றச்சாட்டுகள்:


முன்னதாக, மார்ச் மாதம், காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார், கர்நாடக காவல்துறை தலைவர் பிரவீன் சூட் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். திறமையற்றவர் என்றும், கர்நாடகாவில் பாரதிய ஜனதா அரசாங்கத்தின் கைக்கூலி என்றும் குற்றம் சாட்டினார்.


கர்நாடகாவில் பாஜக அரசை பாதுகாத்து வருவதாகவும் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து வரும் பிரவீன் சூட்டை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.  


இதில், கவனிக்கத்தக்கது என்னவென்றால், கர்நாடக தேர்தலை முன்னிட்டுதான், பிரவீன் சூட் மீது டி.கே. சிவக்குமார் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். தற்போது, கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அம்மாநிலத்தின் காவல்துறை தலைவர் சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.