கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றிய நிலையில் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளது சித்தராமையாவா? சிவக்குமாரா? என்பது குறித்த கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். 


பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக தேர்தலில் மிக பெரிய வெற்றியை காங்கிரஸ் பதிவு செய்திருந்தாலும், அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் தொடர் குழுப்பம் நீடித்து வருகிறது.  கர்நாடகாவில் கடந்த 10-ம் தேதி நடத்தப்பட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் 13- ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  இதில், காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றியது. அம்மாநிலத்தில் ஆளும் கட்சியான பாஜக 66 இடங்களை கைப்பற்றி ஆட்சியை இழந்துள்ளது.


முதலமைச்சர் பதவி யாருக்கு?


இதையடுத்து, ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது காங்கிரஸ். அந்த வகையில், அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வது தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள், டெல்லி தலைமையிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இதில், காங்கிரஸ் மாநில தலைவர் சிவக்குமார் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் இடையே முதலமைச்சர் பதவிக்கு கடும்போட்டி நிலவி வந்தது.


பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் சித்தராமையா டெல்லிக்கு சென்றார். கர்நாடகாவில் 2வது முறையாக முதலமைச்சராக வேண்டும் என்ற முனைப்பில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன் அவர் ஆலோசனை நடத்துவார் என தகவல்கள் வெளியாகின. சித்தராமையாவை தொடர்ந்து, சிவக்குமாரும் டெல்லிக்கு சென்று காங்கிரஸ் தலைமையிடம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டது.


ஆனால், தற்போது டெல்லி பயணத்தை ரத்து செய்துள்ளதாக டி.கே. சிவக்குமார் தெரிவித்திருந்தார். முன்னதாக, கட்சி எம்.எல்.ஏ.-க்களின் விருப்பத்தை அறிந்து கொள்ளும் வகையில் மத்திய பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள், தங்களின் அறிக்கையை காங்கிரஸ் தலைவரிடம் சமர்பித்துள்ளனர்.


முதலமைச்சர் சித்தராமையா?


இதன் மூலம், கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக சித்தராமையாவை டெல்லி தலைமை தேர்வு செய்திருப்பது போல தெரிகிறது. முன்னதாக, முதலமைச்சர் பதவி இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.


மக்களவை தேர்தலை முன்னிட்டு, தென்னிந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் பொறுப்பு டி.கே. சிவக்குமாருக்கு வழங்கப்படும் என்றும் தேர்தலுக்கு  பின்னர், முதலமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது,. 


வரும் வியாழக்கிழமை, முதலமைச்சர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதில், நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு நாளைக்குள் பதில் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.