Siddaramaiah Meet Rahul : கர்நாடகா முதலமைச்சர் பதவி யாருக்கு? ராகுலுடன் சித்தராமையா - டி.கே.சிவகுமார் சந்திப்பு

கர்நாடக முதலமைச்சர் பதவி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமைய்யா, டி.கே.சிவகுமார் இன்று ராகுல் காந்தியுடன் சந்திப்பு.

Continues below advertisement

கர்நாடக முதலமைச்சர் பதவி விவகாரம் தொடர்பாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர்  சித்தராமைய்யா மற்றும்  கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் ஆகியோர்  ராகுல் காந்தியை டெல்லியில் உள்ள அவர் இல்லத்தில் தனிதனியே இன்று சந்தித்து பேசினர். முதலமைச்சர் பதவிக்கு சித்தராமைய்யா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

Continues below advertisement

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. புதிய முதலமைச்சரை தேர்வு செய்யும் அதிகாரம் காங்கிரஸ் மேலிடத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதனால் யாருக்கு முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம், திணறி வருகிறது. இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்த அவர்களை டெல்லிக்கு வரும்படி கட்சி மேலிடம் அழைப்பு விடுத்தது. அதன்படி சித்தராமையா நேற்று முன்தினமே டெல்லி சென்றுவிட்டார். அவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து, தனக்கு முதலமைச்சர் பதவி வழங்கியே தீர வேண்டும் என கோரிக்கையை முன்வைத்ததாக தகவல் வெளியானது. அங்கு தலைவர்கள் நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தினர். டி.கே.சிவக்குமார் கடைசி நேரத்தில் டெல்லி பயணத்தை ரத்து செய்ததால், முதலமைச்சர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து டெல்லியில் நேற்று 2-வது நாளாக காங்கிரஸ் தலைவர்கள் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர்.

கட்சி மேலிடம்  அழைத்ததன் பேரில் டி.கே.சிவக்குமார் நேற்று காலை டெல்லி  சென்றார். அவருடன் சில ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களும் சென்றனர். டி.கே.சிவக்குமார் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரை நேரில் சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து மல்லிகார்ஜுன கார்கேவின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசினார்.

அந்த சந்திப்பின் போது, கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த தான் மேற்கொண்ட பணிகளை டி.கே. சிவக்குமார், பட்டியலிட்டு கூறியதாக தெரிகிறது.  சித்தராமைய்ய ஏற்கனவே 5 ஆண்டுகள்  பதவியை அனுபவித்துள்ளார் என்றும், எதிர்க்கட்சி தலைவர் பதவியில் 2 முறை இருந்துள்ளார் என்றும், அதனால் இந்த முறை தனக்கு முதலமைச்சர் பதவியை வழங்கியே தீர வேண்டும் என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. 

அதைத் தொடர்ந்து மாலையில்,  மல்லிகார்ஜுன கார்கேவை சித்தராமைய்யா மீண்டும் நேரில் சந்தித்து பேசினார். சித்தராமையா, சாம்ராஜ்நகர் முதல் பீதர் வரை தனக்கு செல்வாக்கு உள்ளதாகவும், தனது செல்வாக்கால் தான் தலித், முஸ்லிம், லிங்காயத் மற்றும் குருபா உள்ளிட்ட பின்தங்கிய சமூகங்களின் வாக்குகள் காங்கிரசுக்கு கிடைத்ததாகவும்,  சித்தராமையா கார்கேவிடம்  கூறியதாக தகவல் வெளியானது.  இந்நிலையில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தியிடம் கூறியுள்ள யோசனையில், சித்தராமைய்யாவுக்கு இரண்டரை வருடம், டி.கே.சிவக்குமாருக்கு  இரண்டரை வருடம் முதலமைச்சர் பதவி வழங்கலாம் அல்லது சித்தராமைய்யாவுக்கு முதலமைச்சர் பதவியும், டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்களுக்கு மூன்று முக்கிய அமைச்சர் பதவிகள் வழக்கலாம் என்றும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு புறம் இருக்க, சித்தராமைய்யாவுக்கு முதலமைச்சர் பதவி வழங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாவும் தகவல் வெளியாகியுள்ளது.

சித்தராமைய்ய, டி.கே. சிவக்குமார் இருவருமே முதலமைச்சர் பதவிக்கு போட்டி போடும் நிலையில், அவர்கள்  ராகுல் காந்தியுடன் சந்தித்து தனித்தனியே பேச்சு வார்த்தை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.  ஓர் அல்லது இரண்டு நாட்களில் காங்கிரஸ் தலைமை, முதலமைச்சர் யார் என்பதை தேர்வு செய்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola