நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா உள்ளிட்டோர் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
நாளை மறுநாள் வாக்குப்பதிவு:
பிரச்சாரம் ஓய்ந்ததால்,தொகுதிக்கு தொடர்பு இல்லாத அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல பிரச்சாரம் முடிந்த பின்னர் கருத்துக் கணிப்புகள் நடத்தி முடிவுகள் வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் 13-ம் தேதி நடைபெறுகிறது.
கர்நாடக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வரும் 10-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுவதால் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற முனைப்புடன், காங்கிரஸ் கட்சியினரும், ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பாஜகவினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர், மத்திய அமைச்சர்கள் பரப்புரை:
ஏற்கனவே பலகட்ட பிரச்சாரங்களை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி கடந்த இரண்டு நாட்களாக பெங்களூருவில் சாலை பேரணி மேற்கொண்டார். திறந்த வாகனத்தில் நின்றவாறு, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள், தொண்டர்களை நோக்கி கையசைத்தார். இதனால் உற்சாகம் அடைந்த பாஜக தொண்டர்கள், பிரதமர் மோடி மீது மலர்களை தூவி வரவேற்பு அளித்தனர். மத்திய அமைச்சர் அமித் ஷா தொட்டபல்லாபூரிலும், முதல்வர் பசவராஜ் பொம்மை கொப்பலிலும், முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஷிகாரிப்புராவிலும் தீவிர மேற்கொண்டனர்.
ராகுல், பிரியங்கா காந்தி தீவிரம்:
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று பெங்களூருவில் உள்ள கே.ஆர்.புரா, மகாதேவபுரா ஆகிய தொகுதிகளில் சாலை பேரணி மேற்கொண்டார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று காலை உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த ராகுல்காந்தி ‘‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் குறைகள், பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும்’’ என்று அவர்களுக்கு உறுதியளித்தார்.
பின்னர் ஊழியர்களுடன் சேர்ந்து மசாலா தோசை சாப்பிட்ட ராகுல், டெலிவரி ஊழியர் ஒருவருடன் ஸ்கூட்டரில் பயணித்தார். பின்னர், ஆனேக்கலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல், மாலையில் அம்பேத்கர் சாலையில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். இன்று இறுதி கட்ட பிரச்சாரம் கர்நாடகாவில் அனல் பறந்தது. காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கர்நாடகாவிலேயே முகாமிட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.